ஆஸ்திரேலியாவில் 3 இந்து கோயில்கள் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் 3 இந்து கோயில்கள் மீது தாக்குதல்:  குற்றவாளிகளை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான சமீபத்திய தொடர் தாக்குதல்கள் கவலைக்குரியவை என்று இஸ்கான் அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோயில்கள் மீதான சமீபத்திய தொடர் தாக்குதல்கள் கவலைக்குரியது என்று கூறிய சர்வதேச கிருஷ்ணா கான்சியஸ்னெஸ் (இஸ்கான்) அமைப்பு, அதற்கு காரணமானவர்களைக் கைது செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளது.

இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா துணைத் தலைவர் ராதாராமன் தாஸ், ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு காவல்துறையின் செயலற்ற தன்மையே காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர், “ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்த 15 நாட்களில் 3 கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், இது நடந்திருக்காது. குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்” என்றார்

மெல்போர்னின் ஆல்பர்ட் பார்க் பகுதியில் அமைந்துள்ள இஸ்கான் கோயில் சமீபத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. அந்த இஸ்கான் கோயிலின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய இஸ்கான் கோயிலின் தகவல் தொடர்பு இயக்குநர் பக்த தாஸ், " இதுபற்றி விக்டோரியா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறைக்கு உதவ சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறினார். இதற்கு முன்பு பொங்கல் பண்டிகை நேரத்தில், கேரம் டவுன்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு முன், ஜனவரி 12 அன்று, மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோயிலும் சேதப்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, இது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் பேசியுள்ளதுடன், விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in