கர்பா நிகழ்ச்சிகளின்போது முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள்: சட்டத்தைக் கையில் எடுக்கும் இந்துத்துவா அமைப்புகள்!

கர்பா நிகழ்ச்சிகளின்போது முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள்: சட்டத்தைக் கையில் எடுக்கும் இந்துத்துவா அமைப்புகள்!

சாதி, மதங்களைத் தாண்டி கொண்டாடப்படுபவை பண்டிகைகள். இவற்றில் மதநல்லிணக்கம் பேணப்படுவது உண்டு. ஆனால், சமீபகாலமாக மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் ஆயுதங்களாகப் பண்டிகைகள் மாறிவருகின்றன. இதில், இந்துத்துவா அமைப்புகளே காவலர்களாகி சட்டத்தைக் கையில் எடுத்து தண்டிப்பதும் நிகழ்கிறது. தற்போது நடைபெற்று வரும் தசரா பண்டிகை இதற்கு உதாரணமாகி வருகிறது.

தசரா பண்டிகையின்போது இளம்பெண்கள், இளைஞர்கள் திரளாகப் பங்குகொள்ளும் கர்பா எனும் நடன நிகழ்ச்சி முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு சர்ச்சைகள் கிளம்புவது சமீப காலமாக வாடிக்கையாகி வருகிறது. தற்போது, இப்பண்டிகையின் நிகழ்வுகள், சிறுபான்மையினருக்கு எதிரானவையாக மாற்றப்படுகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் இந்நிகழ்வுகளின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாகவும் புகார்கள் எழுகின்றன. இவர்களது தவறான நடவடிக்கைகளில் சட்டம் ஒழுங்கு என ஒன்று இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக, பஜ்ரங் தள் அமைப்பினர் மீதுதான் அதிகமான புகார்கள் எழுந்திருக்கின்றன.

இவற்றின் முதல் சம்பவம், செப்டம்பர் 28-ல் குஜராத்தின் ஒரு கர்பா நடன நிகழ்ச்சியில் ஏற்பட்டது. நிகழ்ச்சியைக் காண சில முஸ்லிம் இளைஞர்கள் உள்ளே புகுந்தனர். இவர்களை அடையாளம் கண்ட பஜ்ரங் தளத்தினர் அனைவரையும் பிடித்து கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசத்தில் இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது. இங்குள்ள இந்தோரில் கர்பா நடன நிகழ்ச்சியில் புகுந்த முஸ்லீம் இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது பெண்களை பாலியல் ரீதியில் சீண்டியதாக புகார் எழுந்தது. இந்த நடவடிக்கை பஜ்ரங் தளத்தினர் அளித்த புகாரின் பேரில் எடுக்கப்பட்டது. இந்தோரிலுள்ள அனைத்து கர்பா பந்தல்களிலும் சுமார் 400 பஜ்ரங் தளத்தினர் முஸ்லிம்களைக் கண்காணிக்கும் பணியில் இருந்தனர்.

இதே மாநிலத்தின் ஆகர் நகரில் நவராத்திரி நிகழ்ச்சியில் இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பட்டியலினச் சமூகத்தினர் புகார் செய்திருந்தனர். நவராத்திரிக்காக துர்கா சிலை வைத்தபோது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகாரில் அவர்கள் கூறி இருந்தனர்.

நான்காவது சம்பவம் குஜராத்தின் கேடா மாவட்டத்தின் உந்தேலா எனும் கிராமத்தில் நிகழ்ந்தது. இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கற்களை வீசியதாகப் பிடிபட்ட மூன்று முஸ்லிம்கள் மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு, பஜ்ரங் தளம் அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூகவலைதளங்களில் பரபரப்பைக் கிளப்பியது.

இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் புதியதல்ல. இதற்கு முன் கடந்த ஆண்டு இந்தோரின் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற கர்பா நடன நிகழ்ச்சியில் அதன் 2 மாணவர்கள் உள்ளிட்ட 4 முஸ்லிம் இளைஞர்கள் பிடிக்கப்பட்டனர். இதில், பலவந்தமாக நுழைந்த பஜ்ரங் தளத்தினர் நால்வரையும் பிடித்ததுடன், கல்லூரி நிர்வாகம் ’லங் ஜிகாத்’தை வளர்ப்பதாகப் புகார் தெரிவித்தனர். இதற்கும் முன்பாகவும் ரத்லாமின் பூசைப் பந்தலில் முஸ்லிம்கள் நுழையத் தடை எனக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும் சர்ச்சையானது. இப்பிரச்சனையில் பஜ்ரங் தளத்தினர் மட்டுமல்லாமல் பாஜகவிற்கும் பங்கிருந்ததாகப் புகார் கிளம்பியுள்ளது.

பாஜக ஆளும் மபி-யின் கலாச்சாரத் துறை அமைச்சரான உஷா தாக்கூர், “சிலை வழிபாடுகளில் நம்பிக்கை வைத்தால்தான் முஸ்லிம்கள் வரவேற்கப்படுவார்கள். இவர்களால், கர்பா நடன பந்தல்கள் ஒரு லவ் ஜிகாத்திற்கான களமாக அமைந்துவிட்டன. தனது அடையாளத்தை மறைத்து யாரும் உள்ளே வரக் கூடாது” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

“கர்பா நிகழ்ச்சிகளின் பந்தல்களில் முஸ்லிம்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கக் கூடாது” என பாஜகவின் போபால் தொகுதி மக்களவை எம்பியான பிரக்யா தாக்கூர் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் தலைவர்களின் இதுபோன்ற பேச்சுக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக, கர்பாவில் சிக்கிய முஸ்லிம்களைப் பொதுமக்களே தண்டிக்கும் ஒரு சம்பவமும் நடைபெற்றது. ஒரு முஸ்லிம் இளைஞரை, சாலையிலுள்ள ஒரு கம்பத்தில் கட்டி வைத்து, ஒருவருக்குப் பின் ஒருவர் என கம்புகளால் அடிக்கிறார்கள். இதைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கின்றனர். இதன் பிறகு தண்டிக்கப்பட்ட நபரை போலீஸார் வேனில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இந்தக் காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்று சமீபத்தில் வைரலானது.

மபி-யின் மாண்டஸரின் சுராஜினி கிராமத்தின் கர்பா நிகழ்ச்சியில் புகுந்ததாக 19 முஸ்லிம்கள் மீது புகார் எழுந்தது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டன.

அதேசமயம், இந்த கர்பா நடன நிகழ்ச்சிகளில் இதற்கு நேர்மாறான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. குஜராத்தின் பரோடாவில் கர்பா நடன நிகழ்வின் மூன்றாவது தினத்தில் மத்திய வெளியுறத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இவருடன் சுமார் 50 வெளிநாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அலுவலக உயர் அதிகாரிள் இருந்தனர். இவர்களில் பலரும் கர்பா நடனங்களில் பங்கு பெற்றனர். இதில், தாலிபான் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தான் தூதரான பரீத்தும் இடம்பெற்றிருந்தார். இவர் அங்குள்ளவர்கள் முன், தனக்கு உரிய மரியாதையும், அன்பும் அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல், ராஜஸ்தானின் ஜோத்பூர் கர்பா நடனத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் கிரிஸ் கேல் கலந்துகொண்டார்.

பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில், பிற மதத்தினர் கலந்துகொள்வதை பாஜக பிரச்சினையாகக் கருதவில்லை என்பதுதான் இங்கு கவனித்தக்க விஷயம். ஏனெனில், எதைப் பிரச்சினையாக்குவது என பாஜகவினர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அதேபோல், தசராவில் முக்கிய நிகழ்வான ராவணன் கொடும்பாவி எரிப்பு நடத்தப்படுகிறது. இந்த கொடும்பாவி பெரும்பாலும் முஸ்லிம் கைவினைஞர்களால் செய்யப்படுகிறது. இதுவும், பாஜகவினருக்கு பிரச்சினையாக இல்லை என்பது தெரிகிறது. ஆனால், கர்பா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் சாமானிய முஸ்லிம்கள்தான் இப்படிக் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். மறுபுறம், பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே கர்பா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்துகொள்வதாக இந்துத்துவ அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

எந்த மதத்தின் பண்டிகையாக இருந்தாலும் அதை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வது தவறுதான். ஆனால், அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களைக் காவல் துறையினரிடம்தான் ஒப்படைக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை தண்டிக்க சட்டத்தைத் தாங்களே கையில் எடுப்பது நியாயமாகுமா என்பதுதான் மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in