மதங்கள் கடந்த மாண்பு: ஏழை இந்துப் பெண்ணுக்கு கோயிலில் திருமணம் செய்துவைத்த இஸ்லாமியர்கள்!

மதங்கள் கடந்த மாண்பு: ஏழை இந்துப் பெண்ணுக்கு கோயிலில் திருமணம் செய்துவைத்த இஸ்லாமியர்கள்!

கேரளத்தில் ஏழை இந்துப் பெண்ணுக்கு முஸ்லிம் லீக் கட்சியினர் இந்து கோயில் வளாகத்தில் வைத்தே நேற்று திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கேரளத்தில் முஸ்லிம் லீக் கட்சி வலுவாக உள்ளது. இதன் வேங்ஙர தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி. வேங்ஙர தொகுதிக்குட்பட்ட மண்ணாடிப்பரம்பு ரோஸ் மனார் பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று உள்ளது. இது இஸ்லாமியர்கள் நடத்தும் ஆதரவற்றோர் இல்லம் என்பதால் வறுமையிலும், ஏழ்மையிலும் தவிக்கும் இஸ்லாமியக் குழந்தைகளும், பெற்றோரை இழந்தோருமே இங்கு தங்கி வளர்ந்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவராக சிறிய வயதிலேயே தன் பெற்றோரை இழந்த கிரிஜாவும் வளர்ந்துவந்தார். கிரிஜா இந்து என்றாலும், இஸ்லாமியர்கள் நடத்தும் இந்த ஆசிரமத்தில் அவரது மத சுதந்திரத்துடன் வாழ அனுமதிக்கப்பட்டார். இந்துவாகவே வளர்ந்த கிரிஜாவுக்குத் திருமண வயது வந்தது. கிரிஜாவுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த எடையூர் பகுதியை சேர்ந்த பாலன் என்பவரது மகன் ராகேஷ் உடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்தத் திருமணத்தையும் முன்னே நின்று இஸ்லாமியர்களே நடத்திவைத்துள்ளனர்.

இதற்காக வேங்ஙர பகுதி முழுவதும் திருமண அழைப்பிதழையும் முஸ்லிம் லீக் கட்சியினரே வினியோகித்தனர். வேங்கர அருகில் இருக்கும் அம்மாஞ்சேரிக்காவு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் இந்து முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் கேரள முஸ்லிம் லீக் கட்சியின் மூத்தத் தலைவரும், வேங்ஙர தொகுதி எம்.எல்.ஏவுமான குஞ்ஞாலிக்குட்டி தலைமை வகித்தார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு அறுசுவை சைவ உணவு அளிக்கப்பட்டது. இதையும் முஸ்லிம் லீக் கட்சியினரே செய்திருந்தனர்.

மதங்களைக் கடந்த இந்த செயல் கேரள மக்களை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in