விரும்பியவரை திருமணம் செய்ய முஸ்லிம் பெண்களுக்கு 18 வயது தேவையில்லை: டெல்லி நீதிமன்றம் அதிரடி

விரும்பியவரை திருமணம் செய்ய முஸ்லிம் பெண்களுக்கு 18 வயது  தேவையில்லை: டெல்லி நீதிமன்றம் அதிரடி

பருவமடைந்த முஸ்லிம் பெண்கள் 18 வயது நிரம்பாவிட்டாலும், தாங்கள் விரும்பிய நபரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெண்ணின் பெற்றோர் சம்மதமின்றி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் ஜோடி, தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், தங்களது திருமணத்திற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தங்களைப் பிரிக்க அவர்கள் முயன்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை எனவும், மணமகன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெற்றோர் தப்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரியவந்தது. வீட்டில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் அதனால்தான் விரும்பிய நபரைத் திருமணம் செய்து கொண்டதாக சிறுமியின் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 18 வயது பூர்த்தியடையாவிட்டாலும், முஸ்லிம் பெண் பருவமடைந்திருந்தாலே திருமணத்திற்குத் தகுதியானவர் என்ற முஸ்லிம் சட்டத்தின் கொள்கைகளை மேற்கோள் காட்டினார். முஸ்லிம் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு திருமணமும் நடைபெற்றுள்ளதால், சிறுமி கணவருடன் இருக்கலாம் எனவும், இதில் பெற்றோர்கள் குறுக்கிடக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் முஸ்லிம் விதிமுறைகளின்படி திருமணம் செய்துகொண்ட பிறகே, இருவரும் விரும்பி உடலுறவில் ஈடுபட்டதால், இது பாலியல் வன்கொடுமையாகாது எனவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in