நீரில் மூழ்கிய சிறுமியைக் காப்பாற்றும் போது நடந்த விபரீதம்: மூவர் உயிரிழந்த பரிதாபம்

நீரில் மூழ்கிய சிறுமியைக் காப்பாற்றும் போது நடந்த விபரீதம்: மூவர் உயிரிழந்த பரிதாபம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நீரில் மூழ்கி சிறுமி, அவரது தந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியை சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர்  அம்மாபட்டி கிராமத்தில் உள்ள கோரித்தோட்டம் என்ற இடத்தில் உள்ள  தர்காவுக்கு  தொழுகைக்காக நேற்று  சென்றிருந்தனர். தொழுகை முடித்துவிட்டு அருகில் உள்ள பண்ணப்பட்டி என்ற இடத்தில் குடகனாற்றில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு சென்று வேடிக்கை பார்த்தனர்.  அப்போது அங்கு தேங்கியிருந்த நீரில் ஷேக் பரீத் மகள் மௌபியா (12) என்ற சிறுமி குளிக்க விரும்பினார். 

அவர் இறங்கி குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீருக்குள்  மூழ்கினார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ஷேக் பரீத் (42) மற்றும் உறவினர் ரியாசுதீன் (38) ஆகிய இருவரும் நீருக்குள் பாய்ந்தனர். சிறுமியை மீட்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக அவர்களும் நீரில் மூழ்கினர்.  இதனால்  அவர்களின் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.  அங்கிருந்தவர்கள் உடனடியாக அரவக்குறிச்சி போலீஸார் மற்றும் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்தனர். 

அவர்கள் வந்து மூவரின் உடலையும் மீட்டு கரை சேர்த்து  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  அரவக்குறிச்சி போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியைக் காப்பாற்றச் சென்று இடத்தில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in