பரோல் கேட்டு வேலூர் சிறையில் 13 நாட்களாக உணவைத் தவிர்க்கும் முருகன்

பரோல் கேட்டு வேலூர் சிறையில் 13 நாட்களாக உணவைத் தவிர்க்கும்  முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் வேலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகத் தங்கியுள்ளார். வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கும் பரோல் வழங்க வேண்டும் எனச் சிறை நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்தார். ஆனால் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தைக் காட்டி அவருக்கு பரோல் வழங்கச் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தக் கோரி கடந்த 13 நாட்களாகச் சிறையில் கொடுக்கப்படும் உணவைத் தவிர்த்து வருகிறார். ஆனால், பழங்களையும் தண்ணீரையும் அவ்வப்போது உட்கொண்டு வருகிறார். பாகாயம் காவல் நிலையத்தில் அவர் மீது உள்ள குற்ற வழக்கிற்காக வேலூர் நீதிமன்றத்தில் இன்று முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வழக்கின் தீர்ப்பை 26-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் மீண்டும் வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in