வேலூர் சிறையில் முருகன் தொடர் உண்ணாவிரதம் : அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி

 வேலூர் சிறையில் முருகன் தொடர் உண்ணாவிரதம் : அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி

வேலூர் மத்தியச் சிறையில் உள்ள முருகன் தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் முனைப்பில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகத் தங்கியுள்ளார்.

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கும் பரோல் வழங்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்தார். ஆனால் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தைக் காட்டி அவருக்கு பரோல் வழங்கச் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் நேற்று முன்தினம் திடீரென உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார். சிறை நிர்வாகம் முருகனுக்கு வழங்கிய உணவை ஏற்க மறுத்துத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்துள்ளார். உண்ணாவிரதத்தைக் கைவிடக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in