அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்காத ஏக்நாத் ஷிண்டே அணி!

அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்காத ஏக்நாத் ஷிண்டே அணி!

அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு போட்டியிடவில்லை. மாறாக அதன் கூட்டணிக் கட்சியான பாஜக களமிறங்குகிறது. இந்நிலையில், இன்று பாஜக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தவர் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ரமேஷ் லட்கே. இவர் கடந்த மே மாதம் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதியில் நவம்பர் 3-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ருதுஜா லட்கே
ருதுஜா லட்கே

இந்தத் தேர்தலில் மறைந்த சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கேயின் மனைவி ருதுஜா லட்கே, உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியின் சார்பில் போட்டியிடுகிறார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு இந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை. மாறாக அதன் கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் முர்ஜி படேல் களமிறக்கப்படுகிறார்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று முர்ஜி படேல் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பாஜகவின் மும்பை பிரிவுத் தலைவர் ஆசிஷ் ஷெலார், பாஜக எம்எல்ஏ நிதேஷ் ராணே, அமைச்சரும் ஏக்நாத் ஷிண்டே பிரிவின் செய்தித்தொடர்பாளருமான தீபக் கேசர்கர் ஆகியோர் உடன் இருந்தனர். 2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ரமேஷ் லட்கேயிடம் தோல்வியைச் சந்தித்தவர் முர்ஜி படேல். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் பாஜகவின் தொண்டன். கட்சி என்ன சொல்கிறதோ அதையே செய்கிறேன்” என்று கூறினார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இரு தரப்பும் சிவசேனா கட்சிக்கு உரிமை கொண்டாடினாலும், சட்டப்பேரவையிலும், கட்சியின் நிர்வாக அமைப்பிலும் இரு தரப்புக்கும் எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பது முக்கியமான கேள்வியாகத் தொடர்கிறது. இந்தச் சூழலில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை மையமாக வைத்துத்தான் கட்சியின் அசல் சின்னமான ‘வில் மற்றும் அம்பு’ சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணி கோரியது. இதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயரையும் சின்னத்தையும் முடக்கிவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இரு தரப்பும் தற்காலிகமாகத் தங்களுக்கு விருப்பமான பெயர்கள் மற்றும் சின்னங்களைத் தெரிவிக்குமாறு ஆணையம் உத்தரவிட்டது.

அதில் உத்தவ் தாக்கரே அணி முன்வைத்த உதய சூரியன், திரிசூலம் ஆகிய சின்னங்கள் மறுக்கப்பட்டு, தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு இரண்டு வாட்கள் மற்றும் ஒரு கேடயம், தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே எனும் பெயர் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ‘பாலாசாஹேபாஞ்சி சிவசேனா’ எனும் பெயர் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தற்காலிகமாக சின்னம் மற்றும் கட்சிப் பெயர்கள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொண்டதாக உத்தவ் தாக்கரே அணி விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in