சந்தேகத்தால் சாமியாரை அடித்தே கொன்றனர்: சிக்கிய திருநங்கைகள், நண்பர்கள்

சந்தேகத்தால் சாமியாரை அடித்தே கொன்றனர்: சிக்கிய திருநங்கைகள், நண்பர்கள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் காவி உடை தரித்து, யாசகம் பெற்று தன் வாழ்வை ஓட்டி வந்த சாமியாரை திருநங்கைகள் உள்பட 4 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(60). இவர் குடும்ப வாழ்வை விட்டுவிட்டு காவி உடை தரித்து கோயில், கோயிலாக சுற்றிவந்தார். ஒருகட்டத்தில் வெளியூர்களில் தங்கி யாசகம் பெற்று அங்கேயே வாழ்வை ஓட்டி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் கழிவறை அருகேயே தங்கியிருந்து யாசகம் பெற்று வாழ்வை ஓட்டிவந்தார்.

இந்நிலையில் கண்ணன் அதே இடத்தில் சில தினங்களுக்கு முன்பு சடலமாகக் கிடந்தார். அவரைச் சுற்றிலும் ரத்தமும் இருந்தது. அவரை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜபாளையம் போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இதில் ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் யாசகம் பெறும் திருநங்கைகள் கணபதி சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்த ஜெனிதா(22), மாளவிகா(19), அவர்களது நண்பர்கள் பாரதி சங்கர், ஜெயபிரகாஷ் ஆகிய நான்குபேரும் சேர்ந்து அவரைக் கொலை செய்தது தெரியவந்தது.

போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், திருநங்கைகளின் செல்போன் பேருந்து நிலையத்தில் தொலைந்துள்ளது. அதை சாமியார் கண்ணன் தான் எடுத்திருப்பார் என சந்தேகப்பட்டு அவரிடம் கேட்டிருக்கின்றார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருகட்டத்தில் திருநங்கைகள் ஜெனிதா, மாளவிகா, அவர்களது நண்பர்கள் பாரதி சங்கர், ஜெயபிரகாஷ் ஆகிய நான்குபேரும் சேர்ந்து கண்ணனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் ராஜபாளையம் போலீஸார் இன்று காலையில் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in