போதையில் டார்ச்சர் செய்த மூத்த மகன் கொலை: தற்கொலை நாடகமாடிய தந்தை, இளைய மகன் கைது

கைது செய்யப்பட்ட மதிவாணன், மாதவன்.
கைது செய்யப்பட்ட மதிவாணன், மாதவன்.

குடிபோதையில் தினமும் அடித்து துன்புறுத்தி வந்த மூத்த மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தையும், இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை காசிமேடு திடீர்நகர் 4-வது தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி மதிவாணன். இவருக்கு மதன்குமார்(25), மாதவன்(23) மற்றும் ஒரு மகள் இருந்தனர். மூத்த மகன் மதன்குமார் பெயின்டிங் வேலை செய்து வந்தார். குடிபழக்கத்திற்கு அடிமையான மதன்குமார் தினமும் குடித்து விட்டு வந்து தந்தை, தாய் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் அவரது பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மதன்குமார் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் மதன் குமார் மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் தந்தை, மகன், இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை மதிவாணன் மற்றும் அவரது இளைய மகன் மாதவன் ஆகிய இருவரும் சேர்ந்து கயிற்றால் மதன்குமார் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் மதன்குமார் மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்த அவரது தாய் தேவி அவர் போதையில் உறங்குவதாக நினைத்தார். நேற்று மதியம் 2 மணி வரை மதன்குமார் எழுந்து வராததால் சந்தேகமடைந்த தாய் தேவி, அவரை எழுப்ப முயன்ற போது தான் மகன் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. பின்னர் மகன் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களே மீன்பிடிதுறைமுக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மதன்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்தனர். இதனால் மதிவாணன் மற்றும் அவரது இளையமகன் மாதவன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் கயிற்றால் மதன்குமார் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் இக்கொலை சம்பவத்தில் தாயார் தேவியும் உடந்தையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் பெற்றோரை அடித்து துன்புறுத்திய மூத்த மகனை தந்தையும், இளைய மகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in