செல்போனைத் திருடிய வாலிபர் கொலை: அடித்துக் கொன்ற நான்கு பேர் கைது

செல்போனைத் திருடிய வாலிபர் கொலை: அடித்துக் கொன்ற நான்கு பேர் கைது

செல்போனைத் திருடியதாக வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சியின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் புத்த விஹார் பகுதியில் ஜன.12-ம் தேதி ஒரு வாலிபரின் உடல் கிடந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து சாலையில் கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சாலையில் கிடந்தவர் தீபு(26) என்பவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிய வந்தது. அவரின் முதுகு, கால், கைகளில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து புத்த விஹார் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு கும்பல், தீபு உடலை வாகனத்தில் வந்து வீசி விட்டுச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், புத்த விஹார் ஷியாம் காலனியில் உள்ள சுதீப்குப்தா என்பவர் என்பவர் குடோனில் திருடுவதற்காக தீபுவும், அவரது நண்பர் நவீனும் சென்றுள்ளனர். குடோன் வாசலில் நவீன் காவலுக்கு நிற்க உள்ளே நுழைந்து செல்போனை தீபு திருடும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

அவரை தடி மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் குடோன் உரிமையாளர் சுதீப் குப்தா மற்றும் ராஜீவ்குப்தா, கவுஷல், விஷ்ணு ஆகியோர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், தீபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உடலை புத்த விஹார் பகுதி சாலையில் சுதீப் குப்தா உள்ளிட்ட நான்கு பேர் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுதீப்குப்தா உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். செல்போனை திருடியவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in