புதிய கோயில் கட்டுவதற்காக நடந்த கூட்டம் ரத்தக்களறியானது: பங்காளியைக் குத்திக் கொன்ற வாலிபர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதிதாக கட்டப்பட உள்ள கோயிலுக்காக நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் கிராமப் பகுதியில் புதிதாக அழகருக்கு கோயில் கட்ட அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான கூட்டம் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த ராஜேஷுக்கும், அவரது பங்காளியான மெய்யருக்கும் இடையே விளையாட்டாக ஏற்பட்ட வாய் தகராறு பின்னர் சண்டையாக மாறியுள்ளது.
அப்போது, மெய்யர் தான் வைத்திருந்த கத்தியால் ராஜேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லல் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த தப்பியோடிய கொலையாளியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.