
26/11 தாக்குதல் மீண்டும் நிகழும் என மும்பை போக்குவரத்துக் காவல் துறையின் வாட்ஸ்-அப் உதவி மைய எண்ணுக்கு நேற்று இரவு வந்த தொடர் மிரட்டல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
மும்பை போக்குவரத்து காவல் துறையின் உதவி மைய எண், மத்திய மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயல்படுகிறது. இந்த எண்ணுக்கு நேற்று இரவு 11 மணிக்குத் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்திருக்கின்றன.
‘மும்பையில் நடந்த 26/11 தாக்குதலைப் போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடத்தப்படும்’ என அந்தக் குறுஞ்செய்திகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் குறுஞ்செய்திகள் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
2008 நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியாவில் நிகழ்ந்த மிகக் கோரமான பயங்கரவாதத் தாக்குதல் அது. அதே போன்ற தாக்குதல் மீண்டும் நிகழும் என விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.