கடை வாடகை 40 லட்சம்... பிரமிக்க வைக்கும் ஜியோ வேர்ல்ட் பிளாசா!

ஜியோ வேர்ல்ட் பிளாசா
ஜியோ வேர்ல்ட் பிளாசா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வசிக்கும்  பாந்த்ராவின் குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் கட்டப்பட்டுள்ள, மும்பை மாநகரின் மிகப்பெரிய வணிக வளாகமான ஜியோ வேர்ல்ட் பிளாசாவின் வாடகை பற்றிய விவரங்கள் வெளியாகி பலரையும் மலைக்க வைத்துள்ளது.

7,50,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் 66 சொகுசு பிராண்ட் நிறுவனங்கள் தங்கள் கடைகளை அமைத்துள்ளன. இது தனிப்பட்ட ஷாப்பிங் உதவி, மல்டிபிளக்ஸ் தியேட்டர் மற்றும் ஃபுட் எம்போரியம் போன்ற சேவைகளைக் கொண்டுள்ளது.

இந்த மாலில் லூயிஸ் உட்டன், குஸ்ஸி, பர்பெர்ரி, வாலண்டினோ, டியோர், பாலென்சியாகா, ரோலக்ஸ், போட்டேகா வெனெட்டா, கார்டியர், பல்கேரி, ஜிம்மி சூ போன்ற பிராண்டுகளின் ஷோரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மணீஷ் மல்ஹோத்ரா, ராகுல் மிஸ்ரா, ஃபால்குனி மற்றும் ஷேன் மற்றும் அபு ஜானி-சந்தீப் கோஸ்லா உட்பட பல புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களும் தங்கள் படைப்புகளை ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இவ்வளவு பிரபலமான நிறுவனங்கள் இங்கு ஷோரூம் அமைக்க கடைகளை புக் செய்துள்ள நிலையில் கடைகளின் வாடகை விவரங்கள் வெளியாகி சாதாரண மக்களை மலைக்க வைத்துள்ளது.  லூயிஸ் உட்டன் ஸ்டோர் அமையவுள்ள கடைக்கு  ரூ.40 லட்சம் வாடகை செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய லூயிஸ் உட்டன் ஷோரூம் எனக் கூறப்படுகிறது.

ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் 7365 சதுர அடி பரப்பளவில் இந்த  ஷோரூம் அமைந்துள்ளது.  மொத்தம் 9.5 ஆண்டுகளுக்கு  குத்தகை என்று தெரிகிறது. 36 மாதங்களுக்கு ஒருமுறை வாடகை 15 சதவீதம் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 21, 2023 அன்று போடப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

மற்றொரு சொகுசு பிராண்டான டியோர் ஸ்டோர் ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டியோர் பிராண்ட் கடைக்கு  ரூ.21 லட்சம் வாடகையாம்.  டெபாசிட் தொகையாக மட்டும் ₹ 1.39 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சொகுசு பிராண்டுகள் தங்கள் மாதாந்திர வருவாயில் ஒரு பகுதியை ரிலையன்ஸுடன் பகிர்ந்து கொள்ளும் எனக் கூறப்படுகிறது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, தங்களது மொத்த வருவாயில் 4% முதல் 12% வரை பங்களிப்புகள் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையில் அனைத்து பணக்காரர்களின் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஜியோ கார்டன் மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆடம்பர கார்டனில் தான் திருமணம் நடைபெற்றது.

ஜியோ வேர்ல்ட் பிளாசா இந்தியாவின் மிக விலையுயர்ந்த மால் ஆக மாறியுள்ளது. பிராண்ட் ஷோரூம்கள், விஐபி வரவேற்பு, திருமண வரவேற்பு மற்றும் போர்ட்டர் சேவையும் இந்த பிளாசாவில் கிடைக்கும். ஜியோ வேர்ல்ட் சென்டரின் அதிகாரபூர்வ வலைதளத்தின்படி, முழு மாலிலும் வைஃபை வசதியுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 2,000 கார்கள் மற்றும் SUV-க்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதியுள்ளது.

இந்த இடத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுக்க செலவுகள் தவிர்த்து, 15 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் இதனை சுற்றிப்பார்க்க  பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in