‘தாதா’வை பதம் பார்க்கும் கொசுக்கள்: ஆதாரம் தந்தும் நீதி கிடைக்காத சோகம்

‘தாதா’வை பதம் பார்க்கும் கொசுக்கள்: ஆதாரம் தந்தும் நீதி கிடைக்காத சோகம்

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மும்பை தாதா ஒருவர் சிறையில் தன்னை கொசுக்கள் அச்சுறுத்துவதாக நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.

மும்பை குண்டுவெடிப்பின் சூத்ரதாரியான தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார். அங்கிருந்தபடி ரிமோட் கன்ட்ரோலில் பல நிழலுலக சம்பங்களை தாவூத் வகையாறாக்கள் இயக்குவது வழக்கம். அப்படி தாவூத்தின் அதிரடி அல்லக்கையாக மும்பையில் வலம் வந்தவர் இஜாஸ் லக்டவாலா. தாவூத் இப்ராஹிமின் கராச்சி ஜாகை குறித்தும் அவரது புதிய நேபாள முகாம் குறித்துமான புதிய தகவல்கள் இந்த இஜாஸ் மூலமே வெளியுலக்கு தெரிய வந்துள்ளன. பணம் பறிப்பு வழக்கு ஒன்றில் கைதாகி நவி மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த தாதா, விநோத கோரிக்கையுடன் மாவட்ட நீதிமன்றத்தை நாடினார்.

தாவூத் மற்றும் இஜாஸ்(வலது)
தாவூத் மற்றும் இஜாஸ்(வலது)

தான் அடைக்கப்பட்டிருக்கும் சிறை வளாகத்தில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாகவும், அவற்றால் தினசரி கடிபடுவதுடன் உறமற்ற இரவுகளால் உடல்நிலை பாதிப்படைந்து வருவதாகவும் முறையிட்டார். தனது வாதத்துக்கு ஆதாரமாக தன்னால் கொல்லப்பட்ட கொசுக்களையும் கையோடு எடுத்து வந்திருந்தார். ஆனால் சிறைத்துறை சார்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக கொசுவலை வழங்கப்படுவதில்லை என விளக்கமளித்தனர். இருதரப்பையும் கேட்டறிந்த நீதிமன்றம் சிறை வளாகத்தை கொசுத்தொல்லை இன்றி பராமரிக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

ஆயினும் கொசுவால் நிம்மதி இழந்திருக்கும் தாதா இஜாஸ் நீதி கிட்டாத சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in