பிளாட் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: நிதி நிறுவன சொத்துக்களை முடக்க உத்தரவு

பிளாட் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: நிதி நிறுவன சொத்துக்களை முடக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் பிளாட் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட கிருஷ்ண குழுமம் என்ற நிதி நிறுவனத்தில் மாத தவனையாக பணம் செலுத்தினால் முதிர்வு காலத்தில் இரண்டே முக்கால் சென்ட் பிளாட் தருவதாக கூறினர். இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டது. முழு பணமும் செலுத்தி திட்டம் முதிர்வடைந்ததும் பிளாட்டை பதிவு செய்து தராமல் ஏமாற்றிவிட்டனர். இது குறித்து நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத் தரும் வகையில் நிறுவனத்தினரின் அசையும், அசையா சொத்துக்களை முடக்கவும், விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சதி குமார் சுகுமாரா குரூப், விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால், மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற வேண்டும். சொத்துக்களை முடக்க மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in