முல்லை பெரியாறு கண்காணிப்புக்குழு உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு கண்காணிப்புக்குழு 
உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு

முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு மேற்பார்வை குழுவுக்கே அனைத்து அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் உத்தரவுகளை மதிக்காவிட்டால் நீதிமன்ற அவதிப்பாகும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில், " அணையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இயக்கம் மிகவும் முக்கியம். அணையின் கண்காணிப்பு மேற்பார்வை குழு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

" அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வரும் வரை மேற்பார்வை குழுவுக்கு முல்லை பெரியாறு அணையில் அனைத்து அதிகாரமும் உள்ளது. இரு மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு நிபுணர் என கூடுதலாக மேற்பார்வை குழுவில் இணைக்கிறோம். தற்போதைய நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவே அனைத்தையும் கவனிக்கும். எனவே, கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளரே பொறுப்பு" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், " கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரைகளை இரு மாநிலமும் கடைபிடிக்க வேண்டும். குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவுகளை மதிக்காமல் இருந்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்பதோடு கடும் நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும். மேற்பார்வை குழுவில் ஒரு மத்திய அரசு வல்லுனரும் இடம்பெறுவார்" என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in