இளைய மகனுக்காக துபாயில் ஆடம்பர பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி: விலை எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் துபாயில் விலை உயர்ந்த வில்லாவை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் துபாயில் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடற்கரையோர வில்லாவை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது துபாயின் மிகப்பெரிய குடியிருப்பு சொத்து ஒப்பந்தமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் பாம் ஜுமேராவில் உள்ள சொத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அம்பானியின் இளைய மகன் ஆனந்துக்காக வாங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடற்கரையோர மாளிகையானது துபாயின் பனை வடிவ செயற்கைத் தீவுக்கூட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பங்களா 10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற, வெளிப்புற நீச்சல் குளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கோல்டன் விசாக்களை வழங்குவதன் மூலமும், வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கான தடைகளை தளர்த்துவதன் மூலமாகவும் உலகப் பணக்காரர்களுக்கு விருப்பமான சந்தையாக துபாய் உருவாகி வருகிறது. பிரிட்டிஷ் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மற்றும் பாலிவுட் மெகா ஸ்டார் ஷாருக் கான் ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் அம்பானி புதிதாக வாங்கியுள்ள இந்த வீடு அமைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் நீண்டகால கூட்டாளியான ராஜ்யசபா எம்.பி பரிமல் நத்வானி, இந்த துபாய் வில்லாவை நிர்வகிப்பார் எனக்கூறப்படுகிறது.

93.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புக் கொண்ட உலகின் 11வது பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு மூத்த மகன் ஆகாஷ், மகள் இஷா, இளைய மகன் ஆனந்த் என மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷுக்கு, ரிலையன்ஸ் ஸ்டாக் பார்க் லிமிடெட் நிறுவனம் இங்கிலாந்தில் 79 மில்லியன் டாலர் மதிப்புள்ள மாளிகையை வாங்கியது. ஆகாஷின் ட்வின்ஸ் சகோதரியான இஷாவுக்காக நியூயார்க்கில் ஒரு வீட்டைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முகேஷ் அம்பானியின் முதன்மை வீடாக மும்பையில் உள்ள 27 அடுக்கு வானளாவிய கட்டிடம் உள்ளது. இதில் மூன்று ஹெலிபேடுகள், 168 கார்கள் நிறுத்துமிடங்கள், 50 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், ஒரு பெரிய பால்ரூம் மற்றும் ஒன்பது லிஃப்ட் ஆகியவை உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in