அம்பானி குடும்பத்துக்கு, வெளிநாட்டிலும் ‘இஸட்+’ பாதுகாப்பு: செலவினம் யாருடையது?

முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர்
முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர்

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு உள் மற்றும் வெளிநாடுகளில், உள்துறை அமைச்சகத்தின் உச்ச பாதுகாப்பு சேவையான இஸட்+ வழங்கப்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.

உலக கோடீஸ்வரர் பட்டியலில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கும் இவரது குடும்பத்தினருக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்பை காவல்துறையும், மத்திய உள்துறை அமைச்சகமும் இணைந்து வழங்குகின்றன.

இந்தியாவில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் எங்கே தங்கினாலும் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள ’இஸட்+’ பாதுகாப்பு வளையம் அவர்களை காத்திருக்கும். மனைவி நிதா அம்பானி மற்றும் வாரிசுகளான ஆகாஷ், ஆனந்த், இஷா ஆகிய ஜூனியர் அம்பானிகளும் இந்த பாதுகாப்பு வளையத்தில் அடங்குவார்கள்.

உலகின் மிகப்பெரும் மாளிகைகளில் ஒன்றான மும்பை அன்டிலியாவுக்கான பாதுகாப்பு பொறுப்புகளை மும்பை காவல்துறை கவனித்துக்கொள்கிறது. இது தவிர அம்பானி குடும்பத்தினரின் இதர இந்தியப் பயணங்களுக்கும், தங்கலுக்குமான பாதுகாப்புக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பொறுப்பேற்கிறது.

இதனிடையே இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இதே ’இஸட்+’ பாதுகாப்பு வளையத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பாதுகாப்பு தொடர்பான வழக்கொன்றின் விசாரணையின்போது, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்தது. மேலும் அம்பானி குடும்பத்தினருக்கான பாதுகாப்பு செலவினங்கள் இனி அவர்களையே சாரும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, முகேஷ் அம்பானியின் அன்டிலியா மாளிகைக்கு குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சற்று நேரத்தில் அது வெடித்துச் சிதறும் என்றும் மர்ம அழைப்பு நாக்பூர் காவல் நிலையத்துக்கு வந்தது. இது குறித்து அவர்கள் மும்பை காவல்துறையை எச்சரித்ததை அடுத்து, அன்டிலியாவுக்கு நேற்று முதல் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in