‘இதுவே அரசியல்வாதி அல்லது அதிகாரியின் குழந்தையாக இருந்தால் இப்படி விட்டிருப்பீர்களா..?’

வேதனைத் தாயின் கதறலுக்கு விடை கிடைக்குமா?
‘இதுவே அரசியல்வாதி அல்லது அதிகாரியின் குழந்தையாக இருந்தால் இப்படி விட்டிருப்பீர்களா..?’

குழந்தைகளின் உயிர் குடிக்கும் ஆழ்துளை கிணறுகளின் அவலம் என்று தீருமோ தெரியவில்லை. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியிருக்கும் மற்றொரு துயரம், நாடு அடைந்திருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் செவ்வாய் மாலை அந்த விபரீதம் நிகழ்ந்தது. தன்மய் சாஹூ என்ற 8 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தபோது, அப்பகுதியின் சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். உடனிருந்த சிறுவர்கள் ஓடோடி பெரியவர்களிடம் தெரிவித்ததில், உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. இரவே மாநில பேரிடர் மீட்பு குழு களத்தில் இறங்க, தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் பின்னர் இணைந்தது.

400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றின் 55 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதாக கணித்த மீட்புக் குழுவினர், சிறுவன் மூச்சு விடுவதை உறுதி செய்ததும் அவனுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகளை அனுப்பி வைத்தனர். பாறைகள் நிறைந்திருப்பதாக கூறி மீட்பு பணியில் தாமதமானபோதும், அன்றைய தினம் இரவுக்குள் 40 அடி வரை நெருங்கிவிட்டதாக அறிவித்தனர். இதில் மக்கள் மத்தியில் நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. தொடர்ந்து சிறுவனை பத்திரமாக மீட்கவும், அவன் மேலும் கிணற்றுக்குள் சரியாது இருக்கவும் போராடி வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

மாநில முதல்வரான சிவராஜ் சிங் சௌகான் மீட்பு நிலவரத்தை உடனுக்குடன் தனக்கு அப்டேட் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்தனை முனைப்புகள் தென்பட்டபோதும், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்பதற்கான தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு உதவாததில், அடுத்தடுத்த நாட்களில் மீட்பு பணி என்பது பெயரளவுக்கே நகர்ந்தது. இன்று அதிகாலை மூச்சு பேச்சில்லாத நிலையில் சிறுவனை மீட்டவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்ததை மருத்துவமனையில் உறுதி செய்தார்கள்.

நம்பிக்கையோடு காத்திருந்த மாண்டவி கிராமம் இதனால் கொந்தளித்தது. ”இதுவே ஒரு அரசியல் தலைவர் அல்லது அதிகாரியின் மகனுக்கு நிகழ்ந்திருப்பின் இப்படி அலட்சியமாக சாக விட்டிருப்பீர்களா..?’ என்று கண்ணீரும் கம்பலையுமாக சிறுவனின் தாய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வோர் இல்லை. மீட்பு பணியில் அசிரத்தை இருந்ததை ஒப்புக்கொள்ளும் மாநில அமைச்சர் இந்தர் சிங், ‘தவறிழைத்த அதிகாரிகள் குறித்து விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார்.

ஆனால், சகல திசைகளிலும் நவீன தொழில்நுட்பம் உதவியுடன் சாதனைகள் படைத்து வரும் தேசத்தில் இன்னமும் ஆழ்துளை கிணற்றிலும், கழிவுநீர் தொட்டியின் விஷவாயுக்கும் இறப்போரை தவிர்க்க முடியாதது பெரும் கையாலாகாத்தனம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in