
‘சினிமாவும், சீரியலும் பெருவாரியான இளம்பருவத்தினரை கெடுத்து வருகின்றன’ என்று கொதிப்பு காட்டியுள்ளார் யோகா குருவான பாபா ராம்தேவ்.
கோவா, பானாஜியின் மிராமர் கடற்கரையில் நடைபெற்ற 3 நாள் யோகா பயிற்சி முகாமை அடுத்து, செய்தியாளர்களிடம் யோகா குரு ராம்தேவ் பேசினார். அப்போது அண்மையில் வெளியான திரைப்படங்கள் மற்றும் அவை தொடர்பான சர்ச்சை குறித்தும் பேசினார்.
”இன்று வெளியாகும் சினிமாக்களும், தொலைக்காட்சி சீரியல்களும் இளம்வயதினர் மத்தியில் கீழ்மையான உணர்வுகளைத் தூண்டுகின்றன. இவற்றால் அவர்கள் தறிகெட வாய்ப்பாகிறது. ஆபாச படங்களை மிஞ்சும் அளவுக்கு திரைப்படங்களின் காட்சிகளில் நஞ்சை பரப்புகிறார்கள். தொலைக்காட்சிகள் வாயிலாக ஒளிபரப்பாகும் தொடர்கள் மறைமுகமாக அதே கீழ்மையான இச்சைகளைத் தூண்டுகின்றன.
இவற்றால் இளம்வயதினர் பாதை மாறாது, முறையாக வழிப்படுத்த யோகாவால் மட்டுமே முடியும். இளம்வயதில் யோகா பயில்வது அவர்களது உடல், மனம் மற்றும் ஆன்ம பலத்துக்கு உதவியாகும். கூடுதலாக, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் மதிப்புக் கல்வியை அதிகம் சேர்க்க வேண்டும். இந்த முயற்சிகள் உடனேயும் எடுக்கப்பட வேண்டும்” என்று ராம்தேவ் பேசினார்.