காதலித்ததால் ஆத்திரம்... 2 மகன்கள் துணையோடு மகளைக் கொன்று புதைத்த கொடூரத் தாய்

மகளை ஆணவக்கொலை செய்த தாய் கைது
மகளை ஆணவக்கொலை செய்த தாய் கைதுகாதலித்ததால் ஆத்திரம்... 2 மகன்கள் துணையோடு மகளைக் கொன்று புதைத்த கொடூரத் தாய்

பீகாரில் காதல் விவகாரத்தில் மகளை 2 மகன்களுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து தாய் ஆணவக்கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள மேல்வார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகினி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபரைக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு ராகினியின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும், அந்த வாலிபரை ராகினி தொடர்ந்து சந்தித்து வந்தார்.

இந்த நிலையில், அவரை ஆணவக்கொலை செய்ய ராகினியின் தாய், அவரது 2 அண்ணன்கள் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு உறங்கிக் கொண்டிருந்த ராகினியின் கழுத்தை நெரித்து அவர்கள் கொலை செய்தனர். அத்துடன் வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி ராகினியின் உடலைப் புதைத்துள்ளனர்.

நேற்று அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. ராகினி எங்கே என்று அவரது தாயிடம் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசியுள்ளார். இதனால் அவரைப் பிடித்து பர்சௌனி காவல் நிலையத்தில் ஊர்மக்கள் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலிக்கக்கூடாது என்று எத்தனையோ முறை வற்புறுத்தியும் என் மகள் கேட்கவில்லை. அதனால் எனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து மகளைக் கொன்று புதைத்து விட்டேன் என்று ராகினியின் தாய் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து புதைக்கப்பட்ட ராகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகினியின் தாயைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆணவக்கொலையில் தொடர்புடைய ராகினியின் இரண்டு சகோதரர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in