பைக் வாங்கிக் கொடுக்க பெற்றோர் மறுப்பு: உயிரை மாய்த்த போதைக்கு அடிமையான 22 வயது மகன்

இறப்பு
இறப்புOWNER

பெற்றோர் புது பைக் வாங்கித் தராத வேதனையில் மகன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்தத் தலைமுறை இளைஞர்கள் சின்ன, சின்ன விசயங்களுக்குக் கூட உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் விசயத்தையும் இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், இடையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார்(22). இவருக்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துவந்தது. இந்நிலையில் தன் அம்மா ரெஞ்சிதத்திடம் தனக்கு புது மோட்டார் சைக்கிள் வேண்டும் என வாங்கிக் கேட்டுள்ளார். ஏற்கெனவே குடிப்பழக்கம் இருக்கும் சதீஸ்குமாருக்கு பைக் வாங்கிக் கொடுத்தால் குடித்துவிட்டு எங்காவது விழுந்துவிடுவார் என அவரது தாயார் வாங்கிக் கொடுக்க மறுத்தார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் சதீஸ்குமார் விஷம் அருந்தினார்.

கடந்த சிலதினங்களாகவே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சதீஸ்குமார் இன்று உயிர் இழந்தார். இதுகுறித்து தென் தாமரைக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக இளவயதினர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. கட்டுப்பாடற்ற மது பழக்கமே பெருகும் தற்கொலைகளுக்கும் காரணமாக உள்ளது. அரசு தற்கொலைக்கு எதிரான கருத்தியலை இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in