அரசியல் சர்ச்சையாகும் அன்னை தெரசா அறக்கட்டளை விவகாரம்!

கோவா தேர்தலை முன்வைத்து மம்தா எழுப்பிய சர்ச்சை என பாஜகவினர் புகார்
அரசியல் சர்ச்சையாகும் 
அன்னை தெரசா அறக்கட்டளை விவகாரம்!

கிறிஸ்துமஸ் நாள் அன்று, அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய உள் துறை அமைச்சகம் முடக்கியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய குற்றச்சாட்டு, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சர்ச்சை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது. 5 மாநிலத் தேர்தல்கள் நெருங்கிவரும் சூழலில், இப்பிரச்சினை அரசியல் ரீதியிலான விவாதத்துக்கும் வழிவகுத்திருக்கிறது.

1950-ல் கொல்கத்தாவில், அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டிக்கு நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கிளை மையங்கள் உள்ளன. கொல்கத்தாவில் மட்டும் 19 இல்லங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. வெளிநாடுகளிலும் இதன் கிளை மையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், இந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகவும் இதனால் அதன் 22,000 நோயாளிகளும், ஊழியர்களும் உணவு, மருந்து இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி ட்வீட் செய்தார்.

அதேவேளையில், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி (எஃப்.சி.ஆர்.ஏ), மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை புதுப்பிப்பு தொடர்பான விண்ணப்பம், மத்திய உள் துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

சர்ச்சைகள் எழுந்த நிலையில், அந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிடவில்லை எனத் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சகம், அந்த அறக்கட்டளையே தங்கள் வங்கிக் கணக்கை முடக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியிடம் விண்ணப்பித்ததாகவும் விளக்கம் அளித்தது. “எந்த வங்கிக்கணக்கையும் பயன்படுத்த வேண்டாம் என எங்கள் மையங்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தோம்” என மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் சார்பிலும் விளக்கம் வெளியானது.

இந்தச் சூழலில், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கோவா மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் இந்தப் பிரச்சினையைப் பூதாகரமாக்கியிருப்பதாக பாஜகவினர் கூறுகிறார்கள். திரிபுராவில் கால்பதிக்க முயற்சி செய்த திரிணமூல், தற்போது மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி விவகாரத்தை முன்வைத்து கிறிஸ்தவர்களின் வாக்குகளைத் திரட்ட முயற்சிப்பதாக பாஜகவினர் விமர்சித்திருக்கிறார்கள். மம்தாவின் புகார்கள் ஆதாரமற்றவை எனக் கூறியிருக்கும் மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

அதேவேளையில், இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்திருப்பதையும் மறுக்க முடியாது. அசாமில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்துக்களும் பங்கேற்றதை எதிர்த்து, பஜ்ரங் தள் அமைப்பினர் நடத்திய ரகளை அதிர்ச்சியூட்டியது. எனினும், அது தொடர்பாக யார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஹரியாணாவின் அம்பாலாவில் உள்ள புனித ரெடீமர் தேவாலயத்தில் இயேசு சிலையைச் சிலர் உடைத்த சம்பவத்திலும் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.

2015-ல், “மதமாற்றம் செய்வதற்காகவே ஏழைகள் மீது அன்னை தெரசா கரிசனம் காட்டினார்” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியது, பெரும் சர்ச்சையானது. இப்போதும் அதே குற்றச்சாட்டுகள் இந்துத்துவவாதிகளால் முன்வைக்கப்படுகின்றன.

வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ உரிமம் மிக அவசியம். மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை புதுப்பிப்பு மறுக்கப்பட்டது, அந்த அறக்கட்டளைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவிகளை முடக்கும் என்றே தெரிகிறது.

அதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது, அறக்கட்டளை தொடர்பாக ‘சில பாதகமான அம்சங்கள்' பற்றி மத்திய உள் துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியது. குஜராத்தில் உள்ள அறக்கட்டளையின் இல்லத்தில் தங்கியிருக்கும் மாணவிகள், சிலுவை அணியவும் பைபிள் வாசிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்களை விசாரிப்பதாக, அம்மாநிலக் காவல் துறை கூறியிருந்ததும் அந்தச் செய்தியுடன் பொருத்திப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அன்னை தெரசா சர்வதேச அளவில் அறியப்பட்ட ஆளுமை என்பதால் இந்த விவகாரம் சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலித்திருக்கிறது.

Related Stories

No stories found.