மனதுக்குப் பிடித்த படம் ‘மதர் இந்தியா’ - டெட்ராஸ் அதானம் நெகிழ்ச்சி!

மனதுக்குப் பிடித்த படம் ‘மதர் இந்தியா’ - டெட்ராஸ் அதானம் நெகிழ்ச்சி!
உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம்

உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக மையம் குஜராத்தின் ஜாம்நகரில் இன்று தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி, தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் கலந்துகொண்டார். கோவிட் 19 பெருந்தொற்றுக்குப் பிறகான உலகில், அனைத்துத் தரப்பினருடனுமான ஒத்துழைப்பை நல்குவது உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசிய டெட்ராஸ் அதானம், பாரம்பரிய மருந்துகளுக்கான மையமாக இந்தியாவும் ஜாம்நகரும் இருக்கும் எனப் பெருமிதம் தெரிவித்தார்.

எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரான டெட்ராஸ், இந்தியாவுடனான தனது உறவு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். "இந்தியாவுடன் எனக்கு ஒரு சிறப்புத் தொடர்பு இருக்கிறது. உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதும் பின்னர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பயின்றபோதும் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து வந்திருந்த ஆசிரியர்கள் மூலம், மிக இளம் வயதிலேயே இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் பற்றிக் கற்றுக்கொண்டேன். எனவே, உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக மையம் இந்தியாவில் அமைவது தற்செயலானது அல்ல” என்று அவர் குறிப்பிட்டார். குஜராத்தி மொழியில், "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருக்கிறீர்களா? குஜராத் பயணத்தைக் களிப்புடன் கழிக்கிறேன்" எனப் பேசி அசத்தினார்.

“இது உண்மையிலேயே ஓர் உலகளாவிய திட்டம். 107 நாடுகளின் அரசுகள் பாரம்பரிய மருந்துகளுக்கான அலுவலகங்களைத் திறந்திருக்கின்றன. இதன் மூலம் உலகுக்கு இந்தியா செல்கிறது என்றும், இந்தியாவுக்கு உலகம் வருகிறது என்றும் பொருள் கொள்ளலாம்” என்றார் டெட்ராஸ்.

இந்திப் படங்களைப் பார்த்து ரசித்த அனுபவங்களையும் டெட்ராஸ் அதானம் பகிர்ந்துகொண்டார். “பாலிவுட் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்” என்று நினைவுகூர்ந்த அவர், ஸ்விட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் பாலிவுட் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய சுற்றுலா தலம் என்று கருதுகிறேன். நான் முதன்முதலில் பார்த்த படம் ‘மதர் இந்தியா’. என் இந்திய ஆசிரியர்களைப் போலவே அந்தப் படம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.