
வயோதிகத்தால் தன் தாய் இறந்த நிலையில் அந்தப் பிரிவினைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், வண்டாவிளை பகுதியைச் சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மகள் செல்வமகள்(45). இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. செல்வமகளின் தாய் கடந்த வாரம் உடல்நலமின்மையால் வயோதிகத்தில் உயிர் இழந்தார். இதனால் தாய் அரவணைப்பிலேயே இருந்துவந்த செல்வமகள் மிகுந்த மனவேதனை அடைந்தார். தன் அண்ணன் அன்னகுமார், தந்தை அப்பாதுரை ஆகியோரிடமும் இதுகுறித்தே புலம்பிவந்தார்.
தாய் உயிரிழந்தது முதல் தன் அன்றாடப் பணிகளையே மறந்து பார்ப்பவர்களிடம் எல்லாம் தனக்கும், தன் தாய்க்குமான நெருக்கத்தைச் சொல்லியே புலம்பிவந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வமகள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ராஜாக்கமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, செல்வமகள் உடலைமீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் இறந்த சோகத்தில் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.