மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்: மனநல பாதிப்புதான் காரணமா?

மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்: மனநல பாதிப்புதான் காரணமா?

ஓமலூர் அருகே 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் கணபதி ( 30). இவர் அமரகுந்தி கரட்டுபட்டி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், மல்லிக்குட்டை பரியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் மகள் ஸ்ரீதேவிக்கும் (25) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன் சித்தேஸ்வரன் (4).

ஸ்ரீதேவிக்கு  அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்படும் நிலையில் சற்று மனநிலை பாதிப்பும்  இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதேவி அடிக்கடி  தனது தந்தை வீட்டிற்குச் சென்று சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு  உடல்நலம் சரியானவுடன்  கணவர் வீட்டுக்குத்  திரும்புவாராம். அப்படி  கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கணவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி நங்கவள்ளி கோயிலுக்குச் சென்ற கணபதி, அதற்கு முன்பாக தனது மாமனாருக்கு செல்போனில் அழைத்து,  தான் கோயிலுக்குச் செல்லும் விபரத்தைக் கூறி, தனது வீட்டுக்கு வந்து ஸ்ரீதேவியைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து மாரியப்பன் ஓலைப்பட்டியில் உள்ள மருமகன் வீட்டுக்குச் சென்றார். 

அங்கு வீட்டில்  மகள் மற்றும் பேரக்குழந்தையைக் காணவில்லை.  அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். பின்னர் பக்கத்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பார்த்தபோது தோட்டத்து கிணற்று பக்கம் குழந்தையுடன் ஸ்ரீதேவி சென்றது தெரியவந்தது. அதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது ஸ்ரீதேவி கிணற்றில் பிணமாக மிதந்தார்.  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீதேவியின் உடலை மீட்டார்.

ஆனால், அவரது பேரனைக் காணவில்லை. அவன்   கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதால்  ஓமலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றில் மூழ்கிய சிறுவன் சித்தேஸ்வரனின் உடலை மீ்ட்டனர்.

இதையடுத்து தொளசம்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஸ்ரீதேவி மற்றும் சித்தேஸ்வரனின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீதேவி தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 

அரசுப்பள்ளி ஆசிரியரின் மனைவி, 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓமலூர் பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in