தவறான உறவால் கர்ப்பம்... வெளியில் தெரிந்தால் அவமானம்: பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்று புதைத்த தாய்

ரேணுகா
ரேணுகா

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே முறைகேடான உறவால் தப்பிப் பிறந்த குழந்தையை கொலை செய்த தாயும், அதற்கு உடந்தையாக இருந்த அவருடைய தாயும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலங்கைமான் அருகே உள்ள வேடந்தூரைச் சேர்ந்தவர் முத்து மனைவி ரேணுகா ( 33). இவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனது மூன்று குழந்தைகளுடன் இவர் தனது தந்தை மாரியப்பன் வீட்டுக்கே திரும்பிவிட்டார். கடந்த சில வருடங்களாக தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் ரேணுகாவிற்கு தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாக ரேணுகா கர்ப்பமானார். இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ரேணுகா தனது கர்ப்பத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்து வந்திருக்கிறார். அவர் கர்ப்பமான தகவல் அவரது தாய் ரேவதிக்கு மட்டும் தெரியும். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேணுகாவுக்கு கடந்த 18-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அதனால் தனது தாய் ரேவதியை துணைக்கு அழைத்துக் கொண்டு போய் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். கடந்த 19-ம் தேதியன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து கடந்த 22-ம் தேதி மாலை அவர் தன் தாயுடன் வீடு திரும்பினார். திருவாரூரில் இருந்து அரசு பேருந்து மூலம் சென்று வேடந்தூரில் இறங்கிய அவர்கள் இருவரும் இந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் துணி வைத்திருந்த கட்டைப்பையில் குழந்தையை கிடத்தி அதை அங்கிருந்த வாய்க்கால் பாலத்தின் சுவரில் வேகமாக மோதி இருக்கின்றனர். அதனால் குழந்தை அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து குழந்தையை எடுத்துச் சென்று வீட்டில் மறைவாக வைத்துவிட்டனர். அத்துடன் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக அந்த குழந்தையை தங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டனர். இந்த தகவலை வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்து நேற்று முன்தினம் வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாவுடன் வேடந்தூர் வந்த வட்டாட்சியர், ரேவதியின் வீட்டின் பின்புறம் தோண்டிப் பார்த்தபோது குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அங்கேயே குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்த வலங்கைமான் போலீஸார் நேற்று இரவு குழந்தையை கொலை செய்த தாய் ரேணுகாவையும், அவரது தாயான ரேவதியும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in