
மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து தாய் மற்றும் மகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது கோசிப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி பிரியா (25). இவர்களுக்கு வர்ஷினி என்ற 8 மாத கைக் குழந்தை இருந்தது. இந்நிலையில் பிரியா தனது குழந்தையுடன் அருகே உள்ள தோட்டத்து கிணற்றின் மின் மோட்டார் சுவிட்சைப் போட்டுள்ளார்.
இதையடுத்து ஆழ்குழாய் கிணற்றில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் வருகிறதா என்பதை எட்டி பார்க்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரியா தனது குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய தாயும், சேயும் உயிரிழந்தனர்.
தகவலறிந்த கிராம மக்கள், தோட்டத்து கிணற்றில் மூழ்கிய இருவரது உடல்களையும் மீட்டனர். இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.