சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 6,000க்கும் மேற்பட்டோர் கருத்து: அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கிறது அறநிலையத்துறை

நடராஜர் கோயில்
நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த தங்களது கருத்துக்களையும், புகார்களையும் பொதுமக்கள் மனுவாக அளிக்கலாம் என்று தமிழக அரசின் அறநிலையத் துறையின் அறிவிப்பினை ஏற்று இரண்டு நாட்களில் 6 ஆயிரம் பேருக்கும் மேலான மக்கள் தங்கள் கருத்துகளை அறநிலையத்துறை குழுவிடம் அளித்திருக்கின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து அரசுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் அதனை விசாரிப்பதற்காகவும், கோயிலின் வரவு செலவு கணக்குகளை சரி பார்ப்பதற்காகவும் தமிழக அறநிலையத்துறை சார்பில் குழு ஒன்று அக்கோயிலுக்கு கடந்த ஜூன் 7, 8-ம் தேதிகளில் அனுப்பப்பட்டது.

முன்னரே கடிதம் அனுப்பிவிட்டு வந்த நிலையிலும் ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலைய அதிகாரிகள் குழுவுக்கு கோயில் தீட்சிதர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி தங்கள் வழக்கறிஞர் மூலமாக கடும் ஆட்சேபத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதனால் அக்குழுவினர் ஆய்வுப் பணிகள் எதையும் செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) கோயில் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் கடலூரிலுள்ள இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் 20 மற்றும் 21-ம் தேதியில் நடைபெறும், அப்போது மக்கள் மனு அளிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்காக சென்னை இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி, கடலூர் இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோரைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

அந்த குழுவிடம் நேற்று முதல் இன்று மாலை மூன்று மணி வரையிலும் 6000க்கும் மேற்பட்டவர்கள் நடராஜர் கோயில் குறித்த தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும், புகார்களையும் தெரிவித்துள்ளார்கள்.

மனுக்கள் மூலம் 1,347 பேரும், மின் அஞ்சல் மூலமாக 4,500 பேரும், கடிதம் மூலம் 308 பேரும் தங்கள் கருத்துக்களை அளித்துள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறநிலையத் துறை திட்டமிட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in