தொடர் கனமழை காரணமாக சிம்லாவில் ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
சிம்லா நகரின் புறநகர் பகுதியான டூத்லி என்ற இடத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் புதைந்துள்ளன. அவற்றில் இருந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் அவர்கள் அதற்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சிம்லா மற்றும் சண்டிகரை இணைக்கும் சிம்லா-கல்கா தேசிய நெடுஞ்சாலையில் கோட்டி அருகே சக்கி மோர் என்ற இடத்தில் சாலைப் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. செயின்ட் எட்வர்ட்ஸ் பள்ளிக்கு அருகிலும் நிலச்சரிவு ஏற்பட்டது, இந்த நிலச்சரிவின் காரணமாக பால், செய்தித்தாள்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடந்த சில நாட்களாக பாதிக்கப் பட்டுள்ளது.
மண்டியில் அதிகபட்சமாக 236, சிம்லாவில் 59 மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 40 என மொத்தம் 452 சாலைகள் இப்போது வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளன என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 48 மணிநேரமாக பெய்து வரும் தொடர் மழையால் ஹமிர்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது, இதனால் பியாஸ் நதி மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மான் மற்றும் குனாவின் நுல்லாக்கள் அமைந்துள்ள பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழை மற்றும் நிலச்சரிவுகள் ஹமிர்பூரின் அனைத்து பகுதிகளிலும் பயிர்கள், விளை நிலங்கள் மற்றும் அதிகாரி மற்றும் தனியார் கட்டிடங்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 24 ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து ஆகஸ்ட் 12ம் தேதி வரை, மலைப்பகுதியில் ரூ.6,807 கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகளில் இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர்.