‘மூன்லைட்டிங் என்பது மோசடி வேலை’ - ஊழியர்களிடம் ஐடி நிறுவனங்கள் உக்கிரம் காட்ட என்ன காரணம்?

‘மூன்லைட்டிங் என்பது மோசடி வேலை’ - ஊழியர்களிடம் ஐடி நிறுவனங்கள் உக்கிரம் காட்ட என்ன காரணம்?

'மூன்லைட்டிங்' முறைக்கு அனுமதி இல்லை என்றும், மீறுவோர் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பல்வேறு ஐடி நிறுவனங்களும் இந்த முறைக்கு எதிராகப் பேசத் தொடங்கியிருக்கின்றன. அது என்ன மூன்லைட்டிங்? என்ன பிரச்சினை அதில்?

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஐடி உள்ளிட்ட தனியார் துறை ஊழியர்களில் பெரும்பாலானோர் அலுவலகத்துக்குச் செல்லாமல் தொலைதூர இடங்களில் இருந்தபடியே அலுவலக வேலைகளைச் செய்து அனுப்புவது அதிகரித்தது. அந்தச் சமயத்தில்தான் மூன்லைட்டிங் குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன.

அது என்ன மூன்லைட்டிங் என்கிறீர்களா? நிறுவனத்துக்கு வெளியே வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ தங்கி பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் பிற நிறுவனங்களுக்காக வேலை பார்ப்பது, வேறு பிராஜெக்ட்களைச் செய்துகொடுப்பது போன்றவை மூன்லைட்டிங் எனும் பதத்தால் குறிக்கப்படுகின்றன. அதாவது, ஒரு வேலையில் இருந்துகொண்டே இரண்டாவது வேலையையும் பார்ப்பது மூன்லைட்டிங்.

ஆரம்பத்திலேயே இதற்கு ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

அதேசமயம், சேவை சார்ந்த சில நிறுவனங்கள் மூன்லைட்டிங்கை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றன. குறிப்பாக, உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, மூன்லைட்டிங் கொள்கையை ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதன் மூலம் தங்கள் ஊழியர்கள் வேலை நேரம் போக பிற நேரங்களில் வேறு வேலைகளைச் செய்யவும் சமூக சேவைகளைச் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், மற்ற நிறுவனங்கள் இவ்விஷயத்தில் மிகுந்த கடுமை காட்டுகின்றன. கடந்த மாதம்கூட விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி, “மூன்லைட்டிங் குறித்து தொழில்நுட்பத் துறையில் நிறைய பேசப்படுகிறது. அது நிச்சயமாக ஒரு ஏமாற்று வேலை. மோசடி” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (செப்.12) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அந்நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘நிறுவனத்திடம் ஒப்புதல் பெறாமல், எந்த ஒரு நிறுவனத்தின் இயக்குநர், பங்குதாரர், உறுப்பினர், முழு நேர அல்லது பகுதி நேர வேலையிலும் ஈடுபட அனுமதி கிடையாது. இந்த ரீதியில் எந்த விதமான வணிகச் செயல்பாட்டையும் அனுமதிக்க முடியாது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், சரியானது என நிறுவனம் கருதினால் இதற்கு ஒப்புதல் வழங்கும். கூடவே, தனது விருப்பத்தின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் அதைத் திரும்பப் பெறக்கூடும்’ எனச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. கூடவே, இதை மீறிச் செயல்படுபவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரித்திருக்கிறது இன்ஃபோசிஸ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in