அரசு பள்ளிகளில் இனி மாதந்தோறும் சினிமா... வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்லலாம்: தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் இனி மாதந்தோறும் சினிமா... வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்லலாம்: தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

பள்ளி மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான படத்தைத் திரையிடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனியார் பள்ளிகளுக்கு இணையாகத் தமிழக அரசுப் பள்ளியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் தற்போது அரசுப் பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்முறை கலைஞர்களாகப் பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளைத் தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்ற பெயரில் வகுத்துள்ளது. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. திரைப்படம் முடிந்த பிறகு அது குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வினாடி-வினா நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

5 மாணவர்கள் திரைப்படம் குறித்து தங்களது கருத்துகளை 2-3 நிமிடங்கள் பேசுவார்கள். திரைப்படம் குறித்து மாணவர்கள் தங்களின் கருத்துகளை எழுதியோ அல்லது வரைந்தோ அளிக்கலாம். ஏதேனும் ஒரு காட்சியை அல்லது உரையாடலை நடித்தும் இயக்கியும் காட்டலாம். திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் பிரசுரிக்கப்படும் சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு, மாநில அளவில் ஒருவாரத்துக்கு நடக்கும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிநாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in