பட்டியலினத்தவர் / பழங்குடியினரின் மாதச் சம்பளம் ரூ.5,000-க்கும் கீழ்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி அறிக்கை!

பட்டியலினத்தவர் / பழங்குடியினரின் மாதச் சம்பளம் ரூ.5,000-க்கும் கீழ்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி அறிக்கை!

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினச் சமூக குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் சராசரி மாதச் சம்பளம், 5,000 ரூபாய்க்கும் குறைவு என ஆக்ஸஃபாம் அமைப்பின் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. முஸ்லிம்கள் 7,000 ரூபாய்க்குக் கீழ் சராசரியாக மாத ஊதியம் பெறுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அரசு சாரா அமைப்பான ஆக்ஸ்ஃபாம் இந்தியா, ’இந்தியா பாகுபாடு அறிக்கை 2022’ எனும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஆண்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் எனப் பல்வேறு தரப்பினரின் சமூக பொருளாதார நிலை குறித்த தரவுகள், அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கடன் வசதி, ஊதியம் ஆகியவை இந்த அறிக்கையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன.

கல்வி, வயது போன்றவை ஒருவரின் சம்பாத்தியத்தில் தாக்கம் செலுத்துவதாகத் தெரிவிக்கும் இந்த அறிக்கை, பிற சமூகத்தினரைப் போலவே பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் கல்வித் தகுதி இருக்கும் நிலையிலும், பெரும்பாலும் (41 சதவீதம்) அவர்களது ஊதியம் பிற சமூகத்தினரைவிட குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல், பிற மதத்தினரை ஒப்பிட முஸ்லிம்களின் சராசரி ஊதியம் குறைவாக இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நகர்ப்புற முஸ்லிம்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதற்குக் காரணம் பாகுபாடுதான் எனக் கூறும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, 68 சதவீதம் எடுத்துக்காட்டுகளில் இதுதான் நிலவரம் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

2019-20-ம் ஆண்டுவாக்கில், 15 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புற முஸ்லிம்களில் 15.6 சதவீதம் பேர் முறையாகச் சம்பளம் வழங்கப்படும் வேலையில் பணிபுரிந்ததாகக் கூறும் இந்த அறிக்கை, அதே வயது கொண்ட முஸ்லிம் அல்லாதோரில் இது 23.3 சதவீதம் அதிகம் என்றும் பதிவுசெய்திருக்கிறது.

சுயதொழில் செய்து சம்பாதிப்பவர்களைப் பொறுத்தவரை, பிற சமூகத்தினரைவிட பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினச் சமூகத்தினர் சராசரியாக 2,000 ரூபாய் குறைவாகச் சம்பாதிப்பதாகவும், இதற்கு 78 சதவீதக் காரணம் பாகுபாடுதான் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் 98 சதவீத வேலைவாய்ப்பு இடைவெளி இருப்பதாகவும், இதற்கு பாலின அடிப்படையிலான பாகுபாடுதான் காரணம் என்றும் தெரியவந்திருக்கிறது. பெண்களைவிடவும் ஆண்கள் சராசரியாக 4,000 ரூபாய் அதிகமாக ஊதியம் பெறுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in