'மேன்டூஸ்' புயலால் இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள் இத்தனையா?

'மேன்டூஸ்' புயலால் இன்று  கனமழை பெய்யும்  மாவட்டங்கள் இத்தனையா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மேன்டூஸ்' புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிலையில் அது புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மேன்டூஸ்' புயல் இன்று இரவில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே குறிப்பாக மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க உள்ளது. பெரும்பாலும் அது வலுகுறைந்து தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறிவந்த நிலையில் அது புயலாகவே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'மேன்டூஸ்' புயல்  இன்று காலை 7.30 மணி நிலவரப்படி சென்னைக்கு  தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் உள்ளது. அது  12 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று இரவில் புயலாக அது கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் உறுதியாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். 

தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in