வீண் வதந்திகளை நம்பவேண்டாம்... 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை: கேரளத்தில் குரங்கு அம்மை தடுப்பு தீவிரம்

வீண் வதந்திகளை நம்பவேண்டாம்... 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை: கேரளத்தில் குரங்கு அம்மை தடுப்பு தீவிரம்

குரங்கு அம்மை நோய் அபாயத்தில் இருக்கிறது கேரளம். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில், 5 மாவட்டங்களுக்கு குரங்கு அம்மை நோய் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் மாதிரிகள் அனுப்பப்பட்டு உறுதிசெய்யப்பட்டது. அவர் கடந்த 12-ம் தேதி துபாயில் இருந்து கேரளா வந்தார். அவரோடு தொடர்பில் இருந்த 11 பேர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பத்துபேருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டால் ஒருவரின் நிலை கவலைக்கிடம் ஆகும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குரங்கு அம்மை நோய்க்கு பிரத்யேக சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லாததால் கேரள சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இன்று காலையில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குரங்கு அம்மை நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டிகொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “ஷார்ஜா-திருவனந்தபுரம் இண்டிகோ விமானத்தில் நோய் தொற்றுக்குள்ளான பயணியோடு தொடர்பில் இருந்தோர், அவரது உறவினர்கள் ஆகியோர் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆழப்புழை, கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதன் காரணமாக அந்த மாவட்டங்களிலும் தனிமைப்படுத்துதல் முகாம் அமைக்கப்படும். அம்மாவட்டங்களுக்கும் குரங்கு அம்மை நோய் தொடர்பான சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு அடுத்த, அடுத்த இருக்கையில் இருந்த 11 பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதேபோல் நோயாளியின் பெற்றோர், ஒரு டாக்ஸி, ஆட்டோ டிரைவர், நோயாளிக்கு முதலில் சிகிச்சைக் கொடுத்த ஒரு தோல் மருத்துவர், நோயாளியின் உடமைகளைக் கையாண்ட விமான நிலைய அதிகாரிகள் ஆகியோரும் கண்காணிக்கப்படுகிறார்கள். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர் இப்போது நலமாகவே உள்ளார். வீண் வதந்திகளை நம்பவேண்டாம். குரங்கு காய்ச்சலை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சியும் சுகாதாரப்பணியாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in