
30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட ஈரோடு பத்திரப்பதிவு பெண் அலுவலரின் வீட்டில் ரப்பர் பேண்டுகளில் சுற்றி பல இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தில் சீட்டு மற்றும் சங்கங்களின் பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணி புரிந்து வருபவர் ராஜேஸ்வரி (55). ஆடவர், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சீட்டு நிறுவனம், நிதி நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை சரிபார்த்து புதுப்பிக்கும் பணியை கவனித்து வருகிறார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வெண்ணந்தூரைச் சேர்ந்த சுரேஷ் (29) என்பவரிடம் நான்கு சுய உதவி குழுக்களின் கணக்குகளை சரிபார்த்து புதுப்பித்து தருவதற்காக ராஜேஸ்வரி நேற்று முன் தினம் 28 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது உதவியாளர் தமிழ்ச்செல்வனுடன் லஞ்ச ஒழிப்பு த்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
ராஜேஸ்வரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.ராஜேஷ் அப்போது கூறியிருந்தார். அதன்படி பதிவாளர் ராஜேஸ்வரியின் கோவை மாவட்டத்தில் உள்ள வீட்டில் நேற்று சோதனை நடைபெற்றது. கோவை ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் நடைபெற்ற சோதனையில் வீட்டின் பால்கனியில், பூந்தொட்டியில், வீட்டின் அலமாரியில், பழைய பேப்பர் வைக்கும் இடங்களில் எல்லாம் ரூபாய் நோட்டுக்கள் ரப்பர் பேன்டால் சுற்றப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி மொத்தம் இரண்டு லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி வாங்கிய லஞ்சப் பணத்தை ரப்பர் பேன்டுகளால் சுருட்டி பதுக்கி வைத்திருந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.