சென்னை தனியார் வங்கி ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் திருட்டு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை தனியார் வங்கி ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் திருட்டு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் நூதன முறையில் வாடிக்கையாளர்களின் பணம் திருடப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலை கேசினோ திரையரங்கம் எதிரே தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இதில் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுத்த போது பணம் வரவில்லை என்றும், ஆனால் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூலை மாதம் தொடர்ச்சியாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சார்பில் குழு அமைக்கப்பட்டு ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது ஏடிஎம் மையத்திற்குள் வரும் நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் வழியின் உட்புறம் காகிதம் ஒட்டிக்கொள்ளும் வகையில் ஏதோ ஒன்றை ஒட்டிவிட்டுச் செல்வது பதிவாகியிருந்தது. அவரைத் தொடர்ந்து பணம் எடுக்க வருபவர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயலும் போது பணம் வராமல் திரும்பிச் செல்வதும், அவர்கள் சென்ற பிறகு மீண்டும் ஏடிஎம் மையத்திற்குள் நுழையும் அந்த நபர் தான் ஒட்டிய பொருளை மீண்டும் எடுக்கும் போது உள்ளே சிக்கியிருந்த பணம் வெளியே வந்தவுடன் அவர் அதை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதன் பேரில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இதுவரை வாடிக்கையாளர்களிடம் இருந்து 28,400 ரூபாய் நூதன முறையில் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அந்த கொள்ளையன் வங்கியின் ஊழியரா அல்லது வாடிக்கையாளரா என்பதை உறுதிபடுத்தும் வகையில் வங்கி அதிகாரிகள் மூலம் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. இப்புகார் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in