நடிகர்களின் பெயரைப் பயன்படுத்தி பணமோசடி: வடமாநில கும்பல்கள் அட்டகாசம்

வடமாநில கும்பல்கள்
வடமாநில கும்பல்கள் நடிகர்களின் பெயரைப் பயன்படுத்தி பணமோசடி: வடமாநில கும்பல்கள் அட்டகாசம்

நடிகர்கள், பாடலாசிரியர் உள்ளிட்ட பலரின் பெயரை பயன்படுத்தி பணமோசடியில் வடமாநில கும்பல் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் க்ரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதுடன் புதுப்புது வழிகளில் சைபர் க்ரைம் மோசடிகள் அறங்கேறி வருகிறது. ஏடிஎம் கார்டு மோசடி, பான் கார்டு மோசடி, ஓடிபி மோசடி போன்ற மோசடிகள் பரிமாணமடைந்து தற்போது பாஸ் ஸ்கேம் மோசடி, லிங்க் ஸ்கேம், போலி ஐடி போன்ற மோசடிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காவல்துறை உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியர்கள் போன்றோரின் பெயர்களை பயன்படுத்தி சைபர் க்ரைம் மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகிறது.

ஃபேஸ்புக்கில் காவல்துறை அதிகாரிகளின் ஐடியை போல் கணக்கு தொடங்கி அந்த ஐடி மூலம் நட்பு வட்டாரங்களை உருவாக்கி உடனடியாக பணம் தேவைப்படுகிறது எனக்கூறி மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு ஒரு படி மேலே சென்று வாட்ஸ்அப்பில் பாஸ் ஸ்கேம் என்ற பெயரில் பண மோசடியில் ஈடுபட்டனர். அதாவது வாட்ஸ்அப்பில் போலியாக டிபியை வைத்து கிப்ட் கூப்பன் லிங்கில் பணம் அனுப்புமாறு கூறி பணமோசடியில் ஈடுபடுவது. பல ஆட்சியர்கள், டிஜிபி சைலேந்திரபாபு, மேயர் பிரியா மற்றும் கட்சி பிரமுகர்களின் பெயரில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில் சிக்கி மணிமுத்தாறு காவலர் ஒருவர் 7.5 லட்சம் ரூபாயை இழந்த சம்பவமும் அரங்கேறியது.

இந்தநிலையில் சமீபத்தில் சைபர் க்ரைம் மோசடி கும்பலின் பார்வை திரைப்பிரபலங்கள் பக்கம் திரும்பியுள்ளது. முகநூல், வாட்ஸ்அப்பை தாண்டி தற்போது இன்ஸ்டாகிராமில் இந்த கும்பல் பணம் பறிக்க தொடங்கி உள்ளது. நடிகர் ரவி மரியா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அந்த ஐடி மூலமாக மருத்துவ தேவை போன்ற பல காரணத்தை கூறி அவரது நெருக்கமானவரிடமிருந்து மோசடி கும்பல் பணப்பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோசடியில் ஒருவர் சிக்கி 7 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். இதேபோல பாடலாசிரியர் விவேகா பெயரிலும், நடிகர் மற்றும் திமுக பிரமுகருமான பூச்சி முருகன் பெயரிலும் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்குக்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக குறைவான பாலோயர்களை கொண்ட திரைப்பிரபலங்களை மட்டுமே குறிவைத்து இந்த மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். அதிக பாலோயர்கள் இருப்பவர்களிடம் பணம் கேட்டால் உஷாராகி விடுவார்கள் என்பதால் இதுபோன்று டார்க்கெட் செய்து போலி ஐடி உருவாக்கி மோசடியில் ஈடுபடுவதாக போலீஸார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் திரையில் வராத பிரபலங்களை குறிவைத்து இவர்களுக்கு பண உதவி தேவைப்படும் என்ற நோக்கில் இந்த மோசடியை அரங்கேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் இது போன்ற மோசடி செயலில் வடமாநில கும்பல் ஈடுபடுவதால் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in