குடும்பத்துடன் மூதாட்டியை அடித்து கொலை செய்த கொடூரம்: தலைமறைவாக இருந்த தாய், மகன் சிக்கினர்!

குடும்பத்துடன் மூதாட்டியை அடித்து கொலை செய்த கொடூரம்: தலைமறைவாக இருந்த தாய், மகன் சிக்கினர்!

சொத்து பிரச்சினையில் மூதாட்டியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த தாய், மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல்லைச் சேர்ந்தவர் காந்தாயிஅம்மாள்(80). கணவர் இருசப்பன் இறந்துவிட்ட நிலையில் தனது மகன் சரவணக்குமாருடன் வசித்து வந்தார். இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் கருப்பன், அவரது மனைவி லட்சுமி, மகன் ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து காந்தாயிஅம்மாளை கடுமையாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி காவல்துறையினர் கருப்பனை கைது செய்தனர். தொடர்ந்து, சிகிச்சையில் இருந்த காந்தாயிஅம்மாள் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இதனிடையே, மூதாட்டியை தாக்கிய லட்சுமி மற்றும் அவரது மகன் ரஞ்சித் தலைமறைவாக இருந்த நிலையில் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இச்சூழலில், உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் இருவரையும் இன்று கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in