மோகன்லால் திரைப்பட பாணியில் பாலியல் தொல்லை: பெண்களை பதறவைத்த கேரள வாலிபர் சிக்கினார்

மோகன்லால் திரைப்பட பாணியில் பாலியல் தொல்லை: பெண்களை பதறவைத்த கேரள வாலிபர் சிக்கினார்

கேரளத்தில் மோகன்லால் திரைப்படமான ‘ஸ்படிகம்’ பாணியில் தன் வேட்டியை அவிழ்த்து எதிராளியின் முகத்தை மறைத்து பாலியல் ரீதியாகத் தாக்கும் வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

கேரளத்தின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. கடந்த 1995-ம் ஆண்டு மோகன்லால் நடித்த `ஸ்படிகம்' படம் வெளியானது. இந்தப்படத்தில் மோகன்லால் தன் எதிரிகளைப் பின் தொடர்ந்து சென்று திடீரென தன் வேட்டியை அவிழ்த்து அவர்களின் முகத்தில் போட்டுவிட்டு அவர்களைத் தாக்குவார். இதனால் எதிராளிகளுக்குத் தன்னைத் தாக்கியது யார் என்றே தெரியாது. இதேபாணியை விஷ்ணு, பெண்களை பாலியல் தொல்லை கொடுக்க பயன்படுத்தியுள்ளார்.

வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்களைக் குறிவைத்து விஷ்ணு இதை அரங்கேற்றியுள்ளார். அந்தப் பெண்களின் பின்னாலேயே சென்று, திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவார். கண் இமைக்கும் நொடியில் மறைந்தும் விடுவார். இதனாலேயே இவரது நண்பர்கள் வட்டத்தில் `ஸ்படிகம்' விஷ்ணு என்றே அழைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 'ஸ்படிகம்' விஷ்ணுவைக் கைது செய்த பாலக்காடு தெற்கு போலீஸார், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 341,323, 354 ஏ(1), 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 'ஸ்படிகம் 'விஷ்ணு இதேபோல் வேறு எந்த, எந்தப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in