கடவுள்தான் காசியின் அரசாங்கம்!

வாராணசியில் கங்கையில் புனித நீராடிய மோடி
கடவுள்தான் காசியின் அரசாங்கம்!

600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயத்தைத் திறந்துவைக்க, உத்தர பிரதேசத்தின் வாராணசிக்குச் சென்றிருக்கும் பிரதமர் மோடி, கங்கையில் புனித நீராடினார்.

இரண்டு நாள் பயணமாக, வாராணசி சென்றிருக்கும் பிரதமர் மோடி, கால பைரவர் கோயிலில் வழிபட்டது, காரில் சென்றபோது பக்தர் ஒருவர் அளித்த தலைப்பாகையை அணிந்துகொண்டது, கட்டுமானப் பணிகளில் பணியாற்றிய கைவினைக் கலைஞர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தது என இன்றைய நிகழ்வில் சுவாரசியமான காட்சிகள் ஏராளம்.

இந்நிகழ்வில், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், 3,000-க்கும் மேற்பட்ட ஆன்மிகத் தலைவர்களும் கலந்துகொண்டனர். 339 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட கட்டிடங்களைத் திறந்துவைத்துப் பேசிய மோடி, “சுத்தம், படைப்பாற்றல், தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சி ஆகிய மூன்று உறுதிமொழிகளை உங்களிடம் கோருகிறேன். இவை எனக்காக அல்ல, நாட்டுக்காக” என்றார்.

“கடவுள்தான் காசியின் (வாராணசி) அரசு. உடுக்கை வைத்திருப்பவர் (சிவன்) தான் இங்கே ஆட்சி புரிகிறார். புதிய வளாகம் நமது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் காட்டுகிறது. இங்கு பழமையும் புதுமையும் கலந்திருக்கின்றன. பெருந்தொற்றுக்கு நடுவிலும் இந்த வளாகப் பணிகளை நிறைவுசெய்வதற்காக ஓய்வில்லாமல் உழைத்த யோகி ஆதித்யநாத்துக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

மோடியின் கனவுத் திட்டமாக இந்தப் புனரமைப்புப் பணிகள் கருதப்படுகின்றன. வாராணசியில் சுற்றுலாவை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம்.

அதேவேளையில், அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மோடியின் பயணங்கள் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அம்மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்துவைத்திருக்கும் மூன்றாவது திட்டம் இது. கடந்த வாரம், 9,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோரக்பூரின் சரயு நீர்ப்பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசத்தில் இம்மாதம் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.

நாளை (டிச.14) நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பாஜக ஆளும் குஜராத், அசாம், அருணாசல பிரதேசம், கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும், பிஹார், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் துணை முதல்வர்களும் கலந்துகொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in