பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? -புதிய விவாதத்தின் பின்னணி!

ஆஷ்லே - மோடி
ஆஷ்லே - மோடி

’இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமைதிக்கான நோபல் பரிசு வெல்வதற்கு தகுதியான போட்டியாளர்’ என்று நற்சான்று வழங்கியுள்ளார் நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவரான ஆஷ்லே தோஜே.

நார்வே தேசத்தை தலைமையாகக் கொண்ட நோபல் பரிசுக் கமிட்டியின் துணைத்தலைவர் இப்படி சொல்லியிருப்பது இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவது தொடர்பான விவாதங்கள் எழுவது இது முதல் முறையும் அல்ல.

2018ஆம் ஆண்டில் ‘சியோல் அமைதிக்கான பரிசு’ மோடிக்கு கிடைத்தது முதலே, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்தடங்கி வருகின்றன. சியோல் அமைதி பரிசு வாங்கியவர்களே பின்னாளில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றிருப்பதும் ஆச்சரியமான ஒற்றுமை. இதனால் இம்முறை நோபல் பரிசுக் குழுவிலிருந்தே குரல் எழுந்திருப்பது பொருட்படுத்தக் கூடியதாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடு, ரஷ்யா நட்பு தேசமானபோதும் ’போருக்கான தருணம் இதுவல்ல’ என்று திடமாக ரஷ்யாவிடம் மோடி கூறியது உள்ளிட்டவற்றை தனது கருத்துக்கு வலுசேர்ப்பதாக கூறுகிறார் ஆஷ்லே தோஜே. ”பொருளாதாரத்திலும், உலகளவிலான வலிமையிலும் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி காண்பதற்கு, அண்மை ஆண்டுகளில் மோடியே காரணம். தேசத்தின் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களில் தொடங்கி, ’யோகா தினம்’ உட்பட சர்வதேச நாடுகள் மத்தியில் இணக்கம் பரப்பிய வகையிலும் மோடியின் சாதனைகள் ஏராளம்.

உக்ரைன் - ரஷ்யா மட்டுமன்றி பூசலுக்கு ஆளாகும் நாடுகளுக்கு இடையே அமைதி காண்பதற்கு நம்பிக்கையான உலகத் தலைவராகவும் மோடி மிளிர்கிறார். இந்த வகையில் அமைதியின் தூதரான மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்வதற்கு மிகவும் வலுவான போட்டியாளராக திகழ்கிறார்” என்று புகழ்ந்திருக்கும் ஆஷ்லே தோஜே, “நான் மோடியின் மிகப்பெரும் ரசிகன்” என்றும் முடித்திருக்கிறார்.

மார்ச் 14 அன்று டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அமைதி தொடர்பான கூட்டம் ஒன்றில் பங்கேற்று, ஆஷ்லே இவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு குறித்து அந்த கமிட்டியை சார்ந்த ஒருவரால் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க முடியாது என்றும், ஆஷ்லே தோஜேவில் பேச்சு இந்திய ஊடகங்களால் தவறாக கையாளப்பட்டிருப்பதாகவும் ஒரு சில ’தரவு சரிபார்ப்பு’ தளங்கள் அறிவுறுத்தி உள்ளன.

ஆனபோதும், நோபல் பரிசுக் குழுவில் இருந்து எழுந்ததாக சொல்லப்படும் மோடி ஆதரவுக் குரலை உலகமெங்கும் இந்தியர்கள் உற்சாகமாக எதிரொலித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in