எல்.கே.அத்வானி பிறந்தநாள்: இல்லம் தேடி வாழ்த்தினார் மோடி!

எல்.கே.அத்வானி பிறந்தநாள்: இல்லம் தேடி வாழ்த்தினார் மோடி!

தேசத்தின் முன்னாள் துணை பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று(நவ.8) 95-வது வயதில் அடியெடுக்கிறார். அவருக்கு பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த எல்.கே.அத்வானி தனது பதின்மத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டராக சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவரான அத்வானி, தற்போது தீவிரமாக பரப்பப்படும் இந்துத்துவா கொள்கைக்கு 90களில் முழுவடிவம் கொடுத்தவர். அவரது ரத யாத்திரையும், உரைகளும் இத்துத்துவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவை.

இந்தியாவின் 7-வது துணை பிரதமராக(2002-2004) பதவி வகித்திருக்கும் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சராகவும்(1998-2004) பணியாற்றி உள்ளார். இதர பல துறைகளின் அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர், பாரதிய ஜனதா கட்சி தலைவர் என பலதரப்பட்ட உயர் பொறுப்புகளை வகித்த பெருமையும் அத்வானிக்கு உண்டு. 2009-ல் கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்ட அத்வானி, மோடி - அமித்ஷா வருகைக்கு பின்னர் சுரத்திழந்தார். வயது மூப்பு காரணமாக தீவிர கட்சிப் பணிகளில் இருந்தும் அண்மைக் காலமாக விலகி இருந்தார்.

அத்வானியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் அவரது இல்லம் சென்று பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார். ரோஜாக்கள் அடங்கிய மலர்ச்செண்டு வழங்கி வாழ்த்திய மோடியுடன் அத்வானி சுமார் அரை மணி நேரம் அளவளாவினார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனிருந்தார்.

அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கட்சியை முன்னெடுத்ததிலும், தேசத்தை கட்டமைத்ததிலும் முக்கிய பங்கு வகித்ததாக தனது வாழ்த்து பதிவில் அத்வானியை அமித் ஷா புகழ்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in