
ஆஸி - இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, பிசிசிஐ சார்பில் இரு நாட்டு பிரதமர்களுக்கும் அளிக்கப்பட்ட வித்தியாசமான நினைவுப் பரிசு கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அகமதாபாத்தின் மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ஆகிய இருவரும், இன்று உற்சாகமாக பங்கேற்று சிறிது நேரம் ஆட்டத்தை கண்டுகளித்தனர்.
இரு நாட்டின் இடையிலான 75 ஆண்டுகால கிரிக்கெட் நட்புறவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நாணயம் ஒன்றும் வெளியிடப்பட்டது. பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் எடுத்த செல்ஃபி சமூக ஊடகங்களில் உடனடி வைரல் ஆனது. அடுத்த கட்டமாக இருவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் அளிக்கப்பட்ட நினைவுப் பரிசு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட அவரது படத்தில், கடந்த 75 ஆண்டுகளின் இந்திய கிரிக்கெட் வீரர்களின் படங்களை கொண்டு கொலாஜ் வடிவில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதே போன்று ஆஸி பிரதமருக்கு வழங்கப்பட்ட அவரது படத்தில், கடந்த 75 ஆண்டுகால ஆஸி கிரிக்கெட் வீரர்களின் படங்கள் கொலாஜ் ஆக தொகுக்கப்பட்டிருந்தன.
இந்த இரு நாட்டுத் தலைவர்களின் கொலாஜ் படங்களும் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன. இந்த கொலாஜ் படங்களை விரித்து, 75 ஆண்டுகளின் கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் அடையாளம் கண்டு சிலாகித்து வருகின்றனர்.