திமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை வெறித்தாக்குதல்; உட்கட்சி பூசலால் பயங்கரம்: வைரலாகும் வீடியோ

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்
வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்

பதவி கிடைக்காத ஆத்திரத்தில் திமுகவின் தெற்கு ஒன்றியச் செயலாளரை வீடு புகுந்து உருட்டு கட்டை மற்றும் கம்பியால் கொலை வெறித் தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி வடக்கு மாவட்டத்தின் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகிப்பவர் ரத்தினசபாபதி. இவர் நேற்று இரவு வீரபாண்டியில் உள்ள தனது வீட்டில் இருந்த போது கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் நாற்காலி ஆகியவற்றைக் கொண்டு சிலர் வீடு புகுந்து சரமாரியாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.‌ இதில் ரத்தின சபாபதியின் கை மற்றும் கால்களில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

​அண்மையில் நடந்து முடிந்த திமுக உட்கட்சித் தேர்தலில் வீரபாண்டி பேரூர் செயலாளராகப் பதவி வகித்து வந்த பேரூராட்சி துணைத்தலைவர் சாந்தகுமாருக்குக் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில், வீரபாண்டியைச்​ சேர்ந்த செல்வராஜ் பேரூர் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால், கட்சியில் தனக்குப் பதவி கிடைக்காத விரக்தியிலிருந்த சாந்தகுமாரின் தூண்டுதலாலே இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக​க் கூறப்படுகிறது.

இந்த கொலைவெறித் தாக்குதலைத் தொடர்ந்து, வீரபாண்டி காவல்துறையினர் மகேந்திரன், காவலராக பணியாற்றி வரும் அவர் மனைவி கவிதா, பிரபாகரன், ராஜேஸ், சாந்தகுமார், வினோத், தீனா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் தேனி திமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in