
தமிழக அரசின் நம்ம ஸ்கூல் திட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதன் இரண்டு எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதியுதவி அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ அமைப்புக்களிடம் நிதி உதவி பெற்று அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதுதான் நம்ம ஸ்கூல் திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்திற்கு உதவும் வகையில் முதல்வரை சந்தித்து பலரும் நிதி அளித்து வருகிறார்கள்.
அந்த அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது ஆகியோர் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்திடும் ’நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்திற்கு தங்களின் ஒரு மாத ஊதியத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.