தோள்சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு: கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

தோள் சீலைப் போராட்ட நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன்
தோள் சீலைப் போராட்ட நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன்படம்: ஜாக்சன் ஹெர்பி

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் தோள் சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா திமுக கூட்டணிக் கட்சிகளின் முன்னெடுப்பில் நடந்துவருகின்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், “அடுத்த ஆண்டு வைக்கம் நூற்றாண்டு விழாவை தமிழக, கேரள அரசு சேர்ந்தே நடத்த வேண்டும்’’என வலியுறுத்தினார்.

முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்திருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மதுரையில் ஆய்வுக்கூட்டத்தை முடித்துவிட்டு இரவு 7.30க்கு அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு மு.க.ஸ்டாலினும், பினராயி விஜயனும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். தொடர்ந்து நாகர்கோவிலில் நடந்த தோள்சீலைப் போராட்ட மேடைக்கு சேர்த்தே வந்தனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தின் வீரமிகு போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலைப் போராட்டம் அதில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. சனாதான பாகுபாடுக்கு எதிராக சமூகநீதிக்கு வித்திட்ட தோள்சீலைப் போராட்டம் என்னும் அடைமொழியைக் கொடுத்து ஏற்றத்தோடு ஏற்பாடு செய்துள்ளீர்கள். எத்தகைய அவலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்பதையும், அவை எத்தனை உணர்வுமிகு போராட்டங்களினால் முறியடிக்கப்பட்டன என்பதை இளம் தலைமுறைக்கு உணர்த்த இப்படியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், நாகரீகத்தில் தமிழகம் உயரத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தோமா என்றால் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை.

ஒருகாலத்தில் அனைத்து உணவு விடுதிக்கும் அனைவரும் போகமுடியாது. பஞ்சமர்களும், குஷ்ட நோயாளிகளும் உள்ளே வரக்கூடாதென்று பதாகை வைக்கப்பட்டிருக்கும். நாடகக் கொட்டகைக்குள் நுழைய தடை இருந்தது. ரயில் நிலையங்களில் உயர் சாதியினர் சாப்பிடத் தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வர்ணத்திற்கும்(சாதி) தனிப்பெட்டி ஒதுக்கவும் கோரிக்கையை சிலர் வைத்திருக்கிறார்கள். 80 வயதைக் கடந்தவர்களுக்கு ஒரு நூற்றாண்டில் தமிழ் சமூகம் உயர்ந்திருப்பது தெரியும். எப்படியிருந்த நாம், இப்படி உயர்ந்திருக்கிறோம் என புரியும்.

இந்த காலமாற்றத்தை உணர்த்தும் விழாவாக தோள் சீலைப் போராட்டத்தின் காலம் அமைந்துள்ளது. தமிழ் சமூகம் நீண்டகாலத்திற்கு முன்பே பண்பாட்டில் செழித்தது. ஆற்றங்கரை வைகை நாகரீகத்தின் அடையாளம் கீழடி. ஆடை மட்டுமல்ல, அணிகலனும் அணிந்து வாழ்ந்தது தமிழ் சமூகம் என்பதைக் கீழடி காட்டுகின்றது. இடைக்கால பண்பாட்டு படையெடுப்பினால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது. மதம், சாதி, சாத்திர, சம்பிரதாயம் பெயரால் பாகுபடுத்திவிட்டார்கள். தீண்டாமையை புனிதம் ஆக்கினார்கள். வீட்டுக்குள் பெண்கள் முடக்கப்பட்டனர். இதற்கு எதிராக வள்ளலார், அய்யா வைகுண்டர், அயோத்திதாசர், பெரியார் ஆகியோர் நடத்திய சீர்திருத்த இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை தலைநிமிரவைத்தது. பக்தி வேறு..பாகுபாடு வேறு என உணர்த்தியவர்கள் இவர்கள்!

ஒடுக்கப்பட்ட மக்கள் வீட்டுக்கு ஓடுவைத்துக் கட்டக்கூடாது, பசு வளர்க்கக் கூடாது, குடைபிடித்துச் செல்லக் கூடாது, ஒரு மாடிக்கு மேல் கட்டக்கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அனுபவித்த கொடுமைகள், வேறு எங்கும் இல்லை. குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் மார்பில் சேலை அணியக் கூடாது என்கின்ற இழிநிலை வேறு எங்கும் இல்லை. இதை மீறி சேலை போட்ட பெண்கள் தாக்கப்பட்டனர். முலை வரி வசூலித்துள்ளனர். இதைவிட அநீதி இருக்கமுடியுமா? வரிகட்டாத பெண் தன் மார்பையே அறுத்து எரிந்தாள். அந்த இடம் அதன் நினைவாக வழிபாட்டுத்தலமாக இன்றும் இருக்கிறது. சீர்திருத்த கிறிஸ்தவ இயக்கங்களும், அய்யா வைகுண்டரும் இந்த விசயங்களுக்கு எதிராக போராடினர். திறந்த மார்போடு பெண்கள் இருக்கக்கூடாது என்ற வைகுண்டர் பொதுக்கிணறுகள் உருவாக்கினார். சிதறிக்கிடந்த மக்களை இணைத்து அன்புக்கொடி அமைத்தார். தலைப்பாகை கட்ட அனைவரையும் பணித்தார். தாழக் கிடப்போரை தற்காப்பதே தர்மம் என்றார் அவர். அவரால் தான் தோள் சீலை அணியலாம் என உத்தரவு வந்தது. அய்யா வைகுண்டர், கர்னல் மன்றா, பி.பாதிரியார், ரிங்கிள் தொபே ஆகியோர் இதற்குப் பாடுபட்டவர்கள். இதனால் இவர்கள் நம் நன்றிக்கு உரியவர்கள். இப்படியெல்லாம் பலபடிகளைத் தாண்டி தான் இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறோம்.

பிரிட்டிஷ் அரசு நாட்டுக்கு பல கேடு செய்து இருந்தாலும், சமூகரீதியாக பல சட்டங்களைக் கொடுத்ததையும் நாம் மறுத்துவிட முடியாது. பெண் குழந்தையை கொல்வதை கொலைக்கு சமம் என அறிவிப்பு, உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு, அனைத்து சாதியினரும் ஓடுவேய்ந்த வீடுகள் கட்டிக்கொள்ளலாம், நகைகள் அணியலாம் என்ற உத்தரவு, நரபலிக்குத் தடை, வேலைவாய்ப்பில் பாகுபாடு இல்லை, விதவை மறுமணம், சிறுமி திருமணத்தடை இப்படி பல சமூக சீர்திருத்தச் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வந்தது.

தொடர்ந்து நீதிக்கட்சியும் அதை செவ்வனே முன்னெடுத்தது. பஞ்சமர் என்னும் சொல் நீக்கப்பட்டு, ஆதிதிராவிடர் என்றும், சாணார் என்பது நாடார் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பள்ளிக்குச் செல்லும் சாலைகளைத் திறந்துவிட்டது நீதிக்கட்சி. தொடர்ந்து காமராஜர், அண்ணா, கருணாநிதி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்த திராவிட மாடல் கட்சி ஆராய்ச்சிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. காலம், காலமாக அடக்கி வைத்திருந்த மக்களை இவர்கள் வளர்க்கிறார்களே என்றும், படிக்க வரும் பெண் பிள்ளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்களே, பெண்களை வெளியே செல்ல வசதியாக இலவச பேருந்து பயணம் வழங்கிவிட்டார்களே எனவும் சிலர் நம்மை எதிர்க்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சமூகநீதிதான் திமுகவின் முதலும், இறுதியுமான குறிக்கோள்.

பெரியார் வைக்கத்திற்கே போய் போராடினார். அந்தப் போராட்டம் தான் எனக்கு ஊக்கம் அளித்தப் போராட்டம் என அம்பேத்கர் எழுதியுள்ளார். அதன் நூற்றாண்டுவிழா அடுத்த ஆண்டு நடக்கிறது. அடுத்த ஆண்டு தமிழக அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டைக் கொண்டாட வேண்டும் என்னும் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தானாக எதுவும் மாறவில்லை. முன்னோடிகளின் தியாகங்களால் தான் மாறியுள்ளது. சீர்திருத்த எண்ணம் கொண்டவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மனிதம் வளர்ப்போம்.”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in