
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்குச் சென்ற தனது மனைவியைக் காணவில்லை என அவரது கணவர் போலீஸில் புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(34). ஒரு பனியன் கம்பெனியில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் டிச.11-ம் தேதி காலை கோவை பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்திற்கு ஒரு வாரகால பயிற்சிக்கு சுபஸ்ரீ சென்றார். இதன் பயிற்சி முடிந்து டிச.18-ம் தேதி வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர் இதுவரைவீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது கணவர் பழனிக்குமார் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்," கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக எனது மனைவி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒரு வார யோகா பயிற்சியில் முதல் முறையாக கலந்து கொண்டார். அதேபோல் டிச. 11-ம் தேதி மீண்டும் அதே வகுப்பில் கலந்து கொள்ள எனது மனைவியை காலை 6 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டுச் சென்றேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து டிச.18 -ம் தேதி அன்று காலை 11 மணிக்கு வகுப்பு முடிந்து மனைவியைக் கூட்டிச் செல்வதற்காக காலை 7 மணிக்கே ஈஷா யோகா மையத்தில் வந்து காத்திருந்தேன். ஆனால், 11 மணியைத் தாண்டியும் எனது மனைவி வெளியே வரவில்லை. இதனால் உள்ளே சென்று விசாரித்தேன். ஆனால், காலையிலேயே வகுப்பு முடிந்த பிறகு அனைவரும் சென்றுவிட்டனர் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சர்ப்பவாசல் வழியாக ஒரு காரில் சுபஸ்ரீ ஏறிச் செல்வது தெரியவந்தது.
இந்த நிலையில், ஒரு செல்போனில் இருந்து எனது செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. பிறகு அந்த நம்பருக்குத் திரும்ப அழைத்தேன். அதில் பேசிய நபர், ஒரு பெண் எனது கணவருக்கு பேச வேண்டும் என்று என்னுடைய போனை வாங்கி ஃபோன் செய்தார், ஆனால், அழைப்பை எடுக்காததால் செல்போனை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்தார். எனது மனைவி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. எனவே, எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சுபஸ்ரீயை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்த இளம்பெண் காணாமல் போன விவகாரம் பெரும் பரபரப்பை ஏந்படுத்தியுள்ளது.