
சென்னையில் வீட்டு மேல்தளத்தில் இருந்த செல்போன் டவர் மாயமாகி உள்ளதாக ஏர்செல் நிறுவனம் புகார் அளித்துள்ளது. அந்த டவரைப் பிரித்து இரும்புக்கடையில் போட்டு காசாக்கிய வீட்டு உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு வடக்கு மாடவீதி பகுதியில் குடியிருப்பவர்கள் சந்திரன், கருணாகரன், மற்றும் பாலகிருஷ்ணன் இவர்களுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செல்போன் டவர் அமைத்தது. இதற்காக மாத வாடகையாக ஒரு தொகையும் ஏர்செல் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஏர்சல் நிறுவனம் மூடப்பட்டது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏர்செல் நிறுவனத்திலிருந்து வீட்டு உரிமையாளர்கள் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு வாடகை கொடுக்கப்படாமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் புரசைவாக்கம் ஏர்செல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான ஊழியர்கள் பயன்பாட்டில் இல்லாத செல்போன் டவர்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தி மாடவீதியில் உள்ள செல்போன் டவரை நேற்று சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த செல்போன் டவர் காணாமல் போனதால் கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியடைந்தனர். உடனே கோயம்பேடு காவல் நிலையத்தில் தங்களுடைய 8.60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஏர்செல் டவரை காணவில்லை என்றும், அதனைக் கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீஸார், வீட்டு உரிமையாளர்களை அழைத்து விசாரணை நடத்தினர். கடந்த சில ஆண்டுகளாக செல்போன் நிறுவனம் வாடகை பாக்கித் தராமல் இருப்பதாகவும், மேலும் டவர் பராமாரிப்பின்றி துருப்பிடித்து, கீழே விழும் சூழ்நிலையில் இருந்ததால் அதனைக் கழற்றி பழைய இரும்பு கடையில் போட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோயம்பேடு போலீஸார் செல்போன் டவரை இருப்பு கடையில் போட்டு காசாக்கிய வீட்டு் உரிமையாளர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வடிவேல் படப்பாணியில் கிணற்றைக் காணோம் என்பது போல் செல்போன் டவரைக் காணோம் என தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.